கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல் சிக்கல்கள், தலைவலி, விஷக் காய்ச்சல், சரும நோய்கள், மன அழுத்தம், இரத்தழுத்தம் போன்ற நோய்களை எதிர்க்கும் ஆற்றல் உடலுக்குக் கிடைக்கும்.
செய்முறை: தரமான இஞ்சி, பூண்டைச் சமமாக எடுத்துத் தோலை உரித்துச் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து, இளம் சூடுள்ள வெந்நீரை ஊற்றி, தனித் தனியாகப் பூண்டுச்சாறு, இஞ்சிச்சாறு எடுக்க வேண்டும். இஞ்சிச் சாற்றை மட்டும் ஒருமணி நேரம் வைத்திருந்து மேலே இருக்கும் சாற்றை மட்டும் எடுக்க வேண்டும். கீழேயுள்ள வெள்ளைப் படிதலை நீக்கி விட வேண்டும்.
பிறகு, இந்தச் சாறுகளை ஒன்றாகச் சேர்த்து இளம் சூட்டில் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி, நூறு மில்லி சாறுக்கு 20 மில்லி எலுமிச்சைச் சாறு வீதம் சேர்க்க வேண்டும். பிறகு, நன்கு ஆறியதும் நூறு மில்லிச் சாறுக்கு ஐந்து மில்லி வீதம் புதினாச்சாறு அல்லது ரோஜாப்பூ சாறு அல்லது கொத்தமல்லி விதைப் பொடி மற்றும் போதியளவில் தேனைக் கலந்தால் மூலிகை பானம் தயார்.
முக்கியக் குறிப்புகள்: இந்தச் சாற்றைக் காலை மற்றும் பகல் உணவுக்குப் பிறகு பத்து மில்லி வீதம் பருகலாம். இந்த பானம் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும், தேனைத் தவிர மற்ற சாறுகளையும் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்துச் சுத்தமாகச் சேமித்தால் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.
சத்துகள் இருப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு, தயாரித்ததும் பருகுவதே நல்லது. இதன் மூலம் உடனடி நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் தடுப்பு மருந்தாக இந்த பானம் செயல்படும். மேலும், இரத்த அழுத்தத்தைச் சீர் செய்தல், இதயத்தை வலுவடையச் செய்தல், இதய அடைப்பைத் தவிர்த்தல், இரத்த அணுக்களைப் பெருக்குதல் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
இந்த பானம் மருத்துவரின் ஆலோசனையில் தயாரிக்கப்பட்டது எனினும், வேறு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.
முனைவர் க.ஞா.கவிதாஸ்ரீ,
உதவிப் பேராசிரியை, முனைவர் ந.ஆனந்தராஜா, திட்ட ஒருங்கிணைப்பாளர்,
தே.சபரி குமார், வேளாண்மை அறிவியல் நிலையம், பொங்கலூர், திருப்பூர்-622667.