கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி தான் அனைத்து நோய்த் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது என்பது, சத்துமிகு உணவுகளை எடுத்துக் கொள்வதால் மட்டுமே சாத்தியமாகும்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும் செயல் ஓரிரு நாட்களில் நடக்கக் கூடியது அல்ல. சத்துகள் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் தான் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்ட முடியும்.
வைரஸ் பரவலைத் தடுக்கும் மருந்துகளைக் கண்டுபிடிக்காத நிலையில், உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி தான் அதை எதிர்கொள்ளும் மருந்தாகும். எனவே தான் மருத்துவ மனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, மருந்துகளுடன் சத்துள்ள உணவுகளும் தரப்படுகின்றன. இதன் நோக்கம், உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பெருக்குவது தான்.
சத்துமிகு உணவுகள்
நோய் அண்டாமல் இருக்க, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு மண்டலம் என்பது, இரத்த அணுக்கள், நோயெதிர்ப்புச் செல்கள் மற்றும் உறுப்புகளின் அமைப்பாகும். இது வலுவற்று இருக்கும் உடல் அடிக்கடி நோய்க்கு உள்ளாகும். நம் உடலிலுள்ள வெள்ளை மற்றும் இரத்த அணுக்கள், ஆன்ட்டிபாடிகள், உறுப்புகள் உள்ளிட்ட பாகங்கள் தான் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
உடலிலுள்ள செல்கள் சீராக இயங்க ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் என்னும் மூலக்கூறு மிகவும் அவசியம். இது, செல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், செல் அழிவு என்பது, தனிப்பட்ட ஆக்ஸிஜன் மூலக்கூறினை அதிகமாக உருவாக்கி, கொழுப்புச் சத்தில் கெடுதல்களை உண்டாக்கி, செல்களில் உள்ள புரதம், டி.என்.ஏ போன்ற மூலக்கூறுகளை அழிப்பதாகும்.
புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, வைட்டமின்கள், தனிமங்கள், நீர் ஆகியன அவசியமான சத்துகள் ஆகும். இவை, நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் தானியங்கள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பால் பொருள்கள், மாமிச உணவு ஆகியவற்றில் உள்ளன. சரிவிகித உணவு என்பது, மாவு, கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்து, தாதுப் பொருள்கள் போன்றவை அடங்கிய உணவை நமது எடைக்கு ஏற்ப உண்பதாகும்.
உணவிலுள்ள இயற்கை நோயெதிர்ப்பு சக்திகளான, உயிர்ச் சத்துகள் சி, இ, ஏ போன்றவை செல்களைக் காப்பாற்றி, நாம் நோயிலிருந்து விடுபட உதவுகின்றன. ஓராக் வேல்யூ (ORAC-Oxygen Radical Absorbance Capacity value) என்பது, நம் உடலில் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தன்மையாகும்.
பிறந்தது முதல் 15 வயது வரை, உடலில் தேவையான ORAC இருக்கும். அதற்குப் பிறகு நாம் தான் இதை வெளியிலிருந்து கொடுக்க வேண்டும். ஓராக் வேல்யூ 5,000 வரை இருக்க வேண்டும். இந்தத் தன்மை, மாதுளை விதை, சீதாப்பழம், திராட்சை விதை, ஆளிவிதை, முருங்கைக் கீரை, கோகோ, சீரகம், பட்டை, மஞ்சள், பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
உணவிலுள்ள ஃபிளாவனாய்டுகள், டானின்கள், ஐசோஃப்ளேவோன்கள், அந்தோசயனிடின்கள், லிக்னின்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பினோலிக் கலவைகள், உடனடி எதிர்ப்பு சக்தியைத் தரவல்லவை. தரமான புரதத்தைப் பச்சைப்பயறு, நரிப்பயறு, உளுந்து, வேர்க்கடலை போன்றவற்றில் இருந்து பெறலாம்.
ஆந்தோசயனிம் என்னும் சத்து, நீலம் மற்றும் சிவப்புநிறக் காய் மற்றும் கனிகளில் உள்ளது. திராட்சை, கத்தரிக்காய், செர்ரிப்பழம், சிவப்புப் செம்பருத்தி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும் ஆந்தோசயனிம் உள்ளது.
கிரிப்டோ சாந்தின் என்னும் சத்தை, மிளகு, சிவப்புப் பூசணி, மாம்பழம் ஆகியவற்றில் இருந்து பெறலாம். இன்டோல் என்னும் சத்தை, முட்டைக்கோசு, டர்னிப், பிராக்கோலி, காளிபிளவர், கடுகுக்கீரை, முளை கட்டிய தானியங்களில் இருந்து பெறலாம். லிக்னன்ஸ் என்னும் சத்து, சோயா பீன்ஸ், முழுத் தானியங்கள், எள்ளு, தவிடு, அப்ரிகாட், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றில் உள்ளது.
வைட்டமின் ஏ, கேரட், பப்பாளி, மாம்பழம், பூசணி, மக்காச்சோளம், தர்ப்பூசணி, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, செங்கீரை போன்றவற்றில் உள்ளது. வைட்டமின் இ, பசலைக்கீரை, பீட்ரூட் கீரை, அவகாடோ, காப்சிகம், வெள்ளரி, மக்காச்சோளம், சூரியகாந்தி விதை, பூசணி விதை, நிலக்கடலை மற்றும் முழுத் தானியங்களில் உள்ளது.
வைட்டமின் சி நிறைந்த காய்கனிகள், கீரை வகைகள் உடலுக்கு மிகவும் அவசியம். இது, பசலைக்கீரை, மிளகு, தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, குடை மிளகாய், முருங்கைக் கீரை, வெந்தயக்கீரை, பாகற்காய் புடலங்காய், கறிவேப்பிலை வெள்ளரி, ப்ராக்கோலி, ஆரஞ்சு, பெரி, கிவி, மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றில் நிறைந்துள்ளது.
பிலேவனாய்ட்ஸ் என்னும் சத்து, சிட்ரஸ் பழங்கள், சிவப்பு வைன், தேயிலை, பச்சைத் தேயிலை, வெங்காயம், ஆப்பிள் ஆகியவற்றில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும் செலினியம், காளான், கறிவேப்பிலை, கடல் உணவு, ஆப்பிள், முழுத் தானியங்கள், பூண்டு, பிரேசில் நட்ஸ், சோளம், பூண்டு, வெங்காயம், முட்டைக்கோசு, ப்ரோக்கோலி ஆகியவற்றில் உள்ளது.
சிங்க் சத்து, பாதாம் பருப்பு, கோதுமை, கோகோ, எள், நிலக்கடலை, மஞ்சள் பூசணி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றில் உள்ளது. முருங்கைக் கீரை, கொள்ளு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, எள், கறுப்புக் கொண்டைக்கடலை, ஓட்ஸ், பேரீச்சம் பழம், வெந்தயக்கீரை மற்றும் கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகம்.
முருங்கைக் கீரை, பீட்ரூட் கீரை, முள்ளங்கிக் கீரை, கோதுமைப்புல், வாழைப்பூ, காராமணி ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால், இரத்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் உற்பத்தி சீராக நடைபெறும்.
பீட்டா கரோட்டின் நிறைந்த காரட், பூசணிக்காய், மாம்பழம், கேரட் பசலைக்கீரை, டர்னிப் கீரை, சக்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடி உண்ண வேண்டும். காளான், கீரைகள், பூசணி, கொட்டை வகைகள், எள்ளு, வெள்ளரி, பயறு வகைகள் ஆகியவற்றில் காப்பர் நிறைந்துள்ளது. தக்காளி, இளஞ்சிவப்புப் பழங்கள், தர்ப்பூசணி ஆகியவற்றில் லைக்கோபீன் உள்ளது.
நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும் மாங்கனீசு, கொட்டை வகைகள், பால் போன்றவற்றில் உள்ளது. பாலிபீனால்ஸ் என்னும் சத்து, கொக்கோ தூள், கொட்டைகள், ஆளி விதை, காய்கறிகள், ஆலிவ், காபி மற்றும் தேநீரில் உள்ளது. ஓமேகா-3 சத்தானது, ஃபேட்டி ஆசிட் கீரைகள், சுண்டல் வகைகள், ஆளிவிதை, வெந்தயம், மீன், வால்நட், உளுந்தங்களி, சியா விதை ஆகியவற்றில் உள்ளது.
குர்குமின், ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி வைரல், பூஞ்சைக் காளான், ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட உயிரியல் நடவடிக்கைகளின் பரந்த அளவைக் கொண்டுள்ளது. குடல் நலமாக இருக்க, புரோ பயாட்டிக் மற்றும் ப்ரீபயாட்டிக் உள்ள உணவுகள் தேவை. ஓட்ஸ், வாழைப்பழம், வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் இருக்கும் ப்ரீபயாட்டிக், குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். தயிரில் புரோ பயாட்டிக் உள்ளது.
பிஃபிடோ பாக்டீரியம் மற்றும் லாக்டோபாசிலஸ் இனங்கள், ஸ்ட்ரெப்டோ காக்கஸ், என்டோரோ காக்கஸ், பேசிலஸ் மற்றும் எஸ்கெரிச்சியா கோலி. புரோ பயாடிக்குகள் ஆகியன குடலைக் காக்கும். தேனீக்கள் தயாரிக்கும் மெழுகுக்கு ஆயுளை நீட்டிக்கும் அரிய குணம் உண்டு. ஆஸ்துமா, இருமல், சளித் தொல்லை போன்ற நுரையீரல் நோய்கள் விரைவில் சரியாகும்.
குர்செடின் என்பது ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றி ஆகும். சிட்ரஸ் என்பது, பெர்ரி, இலைக் காய்கள், மூலிகைகள், மசாலாப் பொருள்கள், பருப்பு வகைகள், தேநீர், கோகோ உள்ளிட்ட தாவரங்களில் இருக்கும் ஃபிளாவனாய்டு ஆகும். கற்பூரவல்லி, வெற்றிலை, தூதுவளை சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், கபசுரக் குடிநீர் போன்றவை நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும்.
முனைவர் க.ஞா.கவிதாஸ்ரீ,
உதவிப் பேராசிரியை, முனைவர் ந.ஆனந்தராஜா, திட்ட ஒருங்கிணைப்பாளர்,
தே.சபரி குமார், வேளாண்மை அறிவியல் நிலையம், பொங்கலூர், திருப்பூர்-622667.