கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
செம்பனை அல்லது ஆப்பிரிக்கன் எண்ணெய்ப் பனை எனப்படும் பாமாயில் மரங்கள் மூலம் ஓராண்டில் ஓர் எக்டரில் 4-6 டன் எண்ணெய் கிடைக்கும். இந்த மரங்கள் மூன்றாண்டில் இருந்து 25 ஆண்டுகள் வரையில் மகசூலைத் தரும். இந்த மரங்களில் இருந்து இருவித எண்ணெய்கள் கிடைக்கும். பழச்சதையில் இருந்து கிடைக்கும் 45-55% எண்ணெய் பாமாயில் எனப்படும். பழக்கொட்டையில் உள்ள என்டோஸ்பெர்ம் என்னும் பருப்பில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய்யைப் போன்ற எண்ணெய் கெர்னல் எனப்படும்.
எண்ணெய்ப் பனைத் தோட்டத்தில் கிடைக்கும் மட்டைகள், ஆண் பூக்கள், பூக்களைச் சுற்றியுள்ள மடல்கள், ஆலைகளில் பதப்படுத்தும் போது கிடைக்கும் காலி பழக்குலைகள், நார், ஓடுகள், அழுக்குத் துகள்கள் போன்றவற்றின் மூலம் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கலாம்.
எண்ணெய்ப் பனை மரங்கள், மட்டைகள் ஆகியவற்றைப் பதப்படுத்தி, கட்டுமானத் துறையில் பலகைகளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இவை எரிபொருளாகவும் பயன்படுகின்றன. இவற்றில் இருந்து வேதிப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த மரங்களில் அதிகளவில் மாவுச்சத்து இருப்பதால், மண்ணில் நன்கு மட்கி மண்ணை வளமாக்கும். மண்ணில் ஈரப்பதத்தைக் காப்பதுடன், மண்ணரிப்பையும் தடுக்கும். இந்த இலைகளில் இருந்து வைட்டமின் இ கிடைக்கிறது.
பழக்குலைகள், நார், ஓடுகள்
பதப்படுத்தும் ஆலைகளில் கழிவாக வெளியேறும் காலி பழக்குலைகளை, எண்ணெய்ப்பனைத் தோட்டத்தில் மூடாக்காக இட்டு ஈரப்பதத்தைக் காக்கலாம். காளான் வளர்ப்பு ஊடகமாகவும் பயன்படுத்தலாம். இந்தப் பழக்குலைகள் மட்கி நல்ல உரமாகவும் அமையும். நாரையும் ஓடுகளையும் நாற்றங்காலில் மூடாக்காக இடலாம்.
நார் மற்றும் ஓடுகள் ஆலைக் கொதிகலன் எரிபொருளாகவும் பயன்படும். எண்ணெய்ப்பனைத் தண்டும், பழக்குலைகளும் கூழாக்கப்பட்டு, காகிதம் செய்யப் பயன்படுகின்றன. பதன ஆலைகளில் வெளியேறும் கழிவுகள் நல்ல கரிம உரமாகும். மேலும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படும்.
எண்ணெய்
உலகளவில் இந்தப் பனை எண்ணெய் சமையலில் அதிகமாகப் பயன்படுகிறது. இது நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். மற்ற தாவர எண்ணெய் வகைகளைப் போல, சமையலின் போது நுரைப்பதோ புகைவதோ கிடையாது. மேலும், இந்த எண்ணெய்யை மற்ற எண்ணெய் வகைகளுடன் கலந்தும் ருசியான உணவுப் பொருள்களைச் சமைக்கலாம்.
வணிக நோக்கில் உருளைக்கிழங்கு சிப்ஸ், உடனடி உணவுகள், கோழி வருவல், சிற்றுண்டிகள் தயாரிப்பில் இந்த எண்ணெய் மிகுதியாகப் பயன்படுகிறது. இந்த எண்ணெய்யில் தயாராகும் உணவுப் பண்டங்கள் பல நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
மார்கரின்
இந்த எண்ணெய்யைப் படிக நிலைக்கு மாற்றி, மார்கரின் தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம். இந்த மார்கரின் நெடுநாட்களுக்குக் கெட்டுப் போவதில்லை.
சார்டனிங்
பாமாயிலில் தயாராகும் சார்டனிங் தரமாக இருக்கும். மேலும், இந்த சார்டனிங் மூலம் ரொட்டி, கேக்கு, கிரீம் மற்றும் பல பண்டங்களைத் தயாரிக்கலாம். இந்தப் பொருள்கள் மென்மையாகவும், நெடுநாட்கள் கெடாமலும் இருக்கும். ரொட்டிகள் எளிதில் உடையும் வகையிலும், வாயில் போட்டதும் கரைந்து சாப்பிட மென்மையாகவும் இருக்கும்.
தாவர நெய்
பனை எண்ணெய்யை மட்டும் கொண்டு அல்லது மற்ற தாவர எண்ணெய்களுடன் கலந்து தாவர நெய்யைத் தயாரிக்கலாம். இதில் கொழுப்பு அமிலங்களின் விகிதம் 5050 அளவில் உள்ளதால், ஆக்சினேற்றம் அடைந்து கெட்டுப் போகாமல் இருக்கும். இதனால் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். மற்ற தாவர எண்ணெய்களைப் போல, பாமாயிலை ஹைட்ரஜனேற்றம் செய்யத் தேவையில்லை.
ஐஸ்கிரீம்
பால் கொழுப்பு இல்லாமல், பனை எண்ணெய்யை மட்டும் பயன்படுத்தி, தரமான ஐஸ்கிரீம் தயாரிக்கலாம். இது, சாப்பிடுவதற்கு மென்மையாகவும், நெடுநாட்கள் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
வெண்ணெய்
சாக்லேட் அல்லது மற்ற பண்டங்கள் தயாரிப்பில், கொக்கோ வெண்ணெய்க்குப் பதிலாகப் பனை எண்ணெய் மற்றும் கெர்னல் எண்ணெய்யைப் பாதியளவிலோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
பாலில்லாத கிரீம்கள்
கிரீம்கள் தயாரிப்பில் பாலுக்கு மாற்றாக, பனை எண்ணெய் மற்றும் கெர்னல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். இந்த கிரீம்களைக் காப்பியில் கலக்கலாம்.
சோப் மற்றும் சலவை சோப்
சமையலுக்கு உதவாத, சுத்திகரிக்கப்படாத எண்ணெய், சோப்பு மற்றும் சலவை சோப்புகள் தயாரிப்பில் பயன்படுகிறது. ஆலைகளில் உள்ள கச்சா பனை ஸ்டியரின் சோப்புகளைத் தயாரிக்க ஏற்றது. நன்றாகச் சுத்திகரித்த ஸ்டியரினை, சோப்புகள் தயாரிப்பில் நேரடியாகப் பயன்படுத்தலாம். இந்த சோப்பு நுரைவளம் மிகுந்தும், நீரில் நன்கு கரையும் வகையிலும், நல்ல நிறத்திலும் இருக்கும்.
வேதிப்பொருள்கள்
உறை கொழுப்பு அமிலங்கள், மைரிஸ்டிக், பால்மிடிக் மற்றும் ரல்டீரிக், மெத்தில் எஸ்டர், கொழுப்பமிலம், கிளிசரால், கொழுப்பு ஆல்கஹால் போன்ற பலவகை வேதிப் பொருள்கள், பனை எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
முனைவர் த.சுமதி,
கா.அருண்குமார், இ.ஆட்லின் விண்ணிலா, தோட்டக்கலைக் கல்லூரி,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.