மானாவாரிப் பயிர்களில் வறட்சி மேலாண்மை!

வறட்சி ice

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

ருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போவதாலும், களைகள் மிகுவதாலும் பயிர் வளர்ச்சி  மற்றும் மகசூல் குறைகிறது. இதனால், வேளாண்மையில் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், வறட்சி போன்ற சிக்கல்களைத் தடுப்பதற்கான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. நீரைப் பாதுகாத்தல் மற்றும் பயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் பூசா ஹைட்ரோ ஜெல் தொழில் நுட்பம் பயன்படுகிறது.

இந்தத் தொழில் நுட்பம் புது தில்லியிலுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தால் 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜெல், தனக்குக் கிடைக்கும் நீர் மற்றும் சத்துகளை, வறட்சி நிலையில் வெளிப்படுத்தி பயிரின் உற்பத்திப் பெருக உதவுகிறது.

உலர்ந்த நிலையில் இருக்கும் பூசா ஹைட்ரோ ஜெல் தனது எடையைப் போல, 350-500 மடங்கு நீரை உறிஞ்சி, படிப்படியாகப் பயிருக்குக் கொடுக்கிறது. இது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர் ஆகும். நாட்டின் வெப்ப மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது.

செயல்முறை

மண்ணில் இடப்படும் பூசா ஹைட்ரோ ஜெல் கடல் பாசியைப் போலச் செயல்படும். மேலும், தான் உறிஞ்சி வைத்துள்ள நீரை, வேரின் உறிஞ்சும் அழுத்தத்துக்கு ஏற்ப மெதுவாக வெளியிடும். இதனால் பயிர்கள் வளர்வதற்கான ஈரப்பதம் தொடர்ந்து கிடைக்கும். இது விரிந்து சுருங்கும் தன்மையைக் கொண்டது.

ஹைட்ரோ ஜெல், பயிர்களின் வேர்களில் ஒட்டிக் கொள்ளும். வெப்பநிலை அதிகமாகி மண்ணின் ஈரப்பதம் குறையும் போது, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நீரை வெளியிடும். இதனால் மண் துகள்கள் ஒருங்கிணைந்து நீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும்; நீர் ஆவியாதல் குறையும். இவ்வகையில், வேர்களும் பயிர்களும் நன்கு வளர்வதற்கு பாலிமர்கள் உதவும்.

பூசா ஹைட்ரோ ஜெல் 60 நாட்கள் வரையில் ஈரப்பதத்தைச் சிறப்பாகத் தக்க வைக்கும். அதன் பிறகு ஜெல் பாலிமரில் உள்ள ஈரப்பதத்தைப் பயிர்கள் உறிஞ்சுவதால், மண்ணின் ஈரப்பதம் படிப்படியாகக் குறையும்.    

பயன்படுத்தும் முறை

எக்டருக்கு 2.5-5.0 கிலோ ஜெல் தேவைப்படும். உலர்ந்த தூளாகக் கிடைக்கும் இதை, மாவைப் போன்ற பத்துப் பங்கு உலர் மணலில் கலக்க வேண்டும். இந்தக் கலவையை, விதைகளை விதைத்த வரிசையில், வேர் அல்லது விதைகளுக்குக் கீழே சீராக இட வேண்டும். விதைப்பின் போதும், நாற்றுகளின் வேர்களை நனைக்கவும், நாற்றங்கால் வளர்ப்பிலும் பயன்படுத்தலாம். அனைத்துப் பயிர்களிலும் பயன்படும் இதன் ஆயுட்காலம் 1-2 ஆண்டுகளாகும். அதன் பிறகு மட்கத் தொடங்கி விடும்.

பிற நன்மைகள்

பாசன அளவு குறைகிறது. நீர் ஆவியாதல் குறைகிறது. நிலத்தில் நீர்ப்பிடிப்புத் திறன் கூடுகிறது. காற்று மற்றும் நீரால் ஏற்படும் மண்ணரிப்புக் குறைகிறது. மண்ணுக்குள் நல்ல காற்றோட்டம் நிகழ்கிறது. மகசூல் 10-50% கூடுகிறது.  


Pachai boomi- ASRAF

முனைவர் .முகமது அஸ்ரப்,

முனைவர் பெ.சாந்தி, முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் வி.அ.விஜயசாந்தி,

முனைவர் ப.யோகமீனாட்சி, வேளாண் அறிவியல் நிலையம், திரூர்-602 025.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading