நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளைத் தாக்கி அழிப்பதற்கான எதிர்ப் பூச்சிகளை இயற்கையே படைத்துள்ளது. இப்பூச்சிகள், தங்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவை காரணமாக, நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிர்களாகவும், விவசாயிகளின் உற்ற நண்பர்களாகவும் விளங்குகின்றன. நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிரினங்களில் பலவகைகள் உள்ளன. இவற்றில், இரை விழுங்கிகள் அல்லது ஊன் உண்ணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இரை விழுங்கிகள் அல்லது ஊன் உண்ணிகள்
இரை விழுங்கிகள் என்பவை இயற்கையிலேயே காணப்படும் பகையினப் பூச்சிகளாகும். மற்ற பூச்சிகளைப் பிடித்துக் கடித்தோ அல்லது முழுதாக விழுங்கியோ அவற்றை உணவாகக் கொள்கின்றன. எடுத்துக் காட்டாகப் பூச்சியினத்தைச் சார்ந்த, தட்டான், பொறிவண்டுகள், தொழுவெட்டுக் கிளிகள் ஆகியவற்றையும், பூச்சியினத்தைச் சாராத, சிலந்திகள், பறவைகள் ஆகியவற்றையும் கூறலாம்.
பூச்சியினத்தைச் சார்ந்த இரை விழுங்கிகள் அல்லது ஊன் உண்ணிகள்: தும்பி என்னும் பெரிய தட்டான்
முழு வளர்ச்சியடைந்த பெரிய தட்டான், பயிரின் மேற்பரப்பில் இரையைத் தேடிப் பறக்கும். இளம் குஞ்சுகள் (naiads) நெல் வயலிலுள்ள நீரில் காணப்படும். இறக்கைகள் பெரிதாகவும், அமர்ந்திருக்கும் போது பக்கவாட்டில் விரிந்தும் காணப்படும். கால்கள் இரையைப் பிடித்து அதை வாய்ப்பகுதிக்கு அனுப்பும் தன்மையில் இருக்கும். இரையைப் பறக்கும் நிலையிலேயே உண்ணும். வாயானது இரையைக் கடித்துண்ணும் அமைப்பில் இருக்கும். தாய் அந்துப் பூச்சிகள், தத்துப் பூச்சிகள் மற்றும் அவற்றின் குஞ்சுகள் பெரிய தட்டானின் இரையாகும்.
ஊசித்தட்டான்
மிருதுவான உடலமைப்பில் இருக்கும் ஊசித்தட்டான், தும்பியென்னும் பெரிய தட்டானை விடச் சிறியது. இறக்கைகள் உடலுக்குச் சற்று மேலே சரிசமமாக நீளவாக்கில் இருக்கும். நெல் வயலில் பழுத்து விழுந்திருக்கும் இலைகளின் மேற்புறத்தில், முன்னும் பின்னும் பறந்து கொண்டே முட்டைகளை இடும். முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், நீரின் மேற்பரப்பில் வாழும். இக்குஞ்சுகள் நீரில் தவறி விழும் குருத்துப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைமடக்குப் புழு மற்றும் இவற்றின் குஞ்சுகளை, நீந்திச் சென்று பிடித்து உண்ணும். நன்கு வளர்ந்த ஊசித்தட்டான், பயிரின் இலைகளுக்குள் பறந்து இரையைத் தேடிப் பிடித்து உண்ணும். தாய் அந்துப் பூச்சிகள், தத்துப் பூச்சிகள் மற்றும் அவற்றின் குஞ்சுகள் ஊசித்தட்டானின் இரையாகும்.
நீள்கொம்பு வெட்டுக்கிளி
உடலைவிட 2 அல்லது 3 மடங்கு நீண்ட உணர்க் கொம்புகள் (antennae) இருக்கும். இளம் குஞ்சின் முதுகில் கறுப்புப் பட்டை வெள்ளைநிற ஓரங்களுடன் காணப்படும். வளர்ந்த நீள்கொம்பு வெட்டுக்கிளி வயிற்றின் நுனிப்பகுதி, மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இரவில் இலைப்பரப்பிலும் கதிர்களிலும் காணப்படும். தத்துப் பூச்சிகளின் குஞ்சுகள், குருத்துப் பூச்சிகள், கதிர்நாவாய்ப் பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள் நீள்கொம்பு வெட்டுக்கிளியின் இரையாகும்.
சில்வண்டு
பழுப்பு நிறத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதியில் வாளைப் போன்ற முட்டையிடும் உறுப்பு இருக்கும். இலையுறைக்குள்ளே முட்டைகளை இடும். பயிர்களின் நடுப்பாகத்தில் காணப்படும் குருத்துப் பூச்சிகள், இலைமடக்குப் புழுக்கள், படைப்புழுக்கள், குருத்து ஈக்கள், தத்துப் பூச்சிகளின் குஞ்சுகள் ஆகியவை சில்வண்டின் இரைகளாகும்.
இரட்டைவால் பூச்சி என்னும் இடுக்கி வண்டு
உலர்ந்த நெல்வயலில் அதிகமாகக் காணப்படும். பயிரின் வேர்ப்பாகத்தில் மண்ணைத் தோண்டினால் இரட்டைவால் பூச்சியைக் காணலாம். கறுப்பாகக் காணப்படும் இதன் வயிற்றுப் பகுதி, பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும். வயிற்றின் நுனிப்பகுதியில் இரண்டு பிறைவடிவ இடுக்கிகள் (cerci) காணப்படும். இரையை மென்று விழுங்கும். இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். நன்கு வளர்ந்த இரட்டைவால் பூச்சி நான்கு மாதங்கள் வரை வாழும். இது குருத்துப் புழுவினால் உண்டாக்கப்படும் துளைக்குள் சென்று புழுவைப் பிடித்து உண்ணும். புகையான், குருத்துப்பூச்சி, இலைமடக்குப் புழு மற்றும் அழுகிய பயிரின் பகுதிகள் இதன் இரையாகும்.
இடையன் பூச்சி, தொழு வெட்டுக்கிளி என்னும் வேண்டுதல் பூச்சி
இது 180 டிகிரியில் தலையைச் சுழற்றும். முன்னங் கால்களில் இரம்பம் போன்ற பல் இருக்கும். அதைப் பெரும்பாலும் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும். இதைப் பார்ப்பதற்குக் கடவுளை வேண்டுவது போலிருக்கும். எனவே, இதற்கு வேண்டுதல் பூச்சி என்னும் பெயருமுண்டு. முன்னங் கால்கள் இரையைப் பிடித்து வைப்பதற்கும், நடு மற்றும் பின்னங் கால்கள் நடந்து செல்வதற்குமான அமைப்பில் இருக்கும். இது, அடையாளம் காண முடியாத அளவில், நெற்பயிரின் நிறத்தைப் போலப் பசுமையாக இருக்கும். குருத்துப் பூச்சி, இலைமடக்குப் புழு, அந்துப்பூச்சி, கதிர்நாவாய்ப் பூச்சி, ஸ்கிப்பர் பட்டாம் பூச்சி, வெட்டுக்கிளி முதலியவை இதன் இரையாகும்.
நீர்த்தண்டி
இதன் முன்னங் கால்கள் மடங்கியிருக்கும். நடு மற்றும் பின்னங் கால்கள் மிகவும் நீளமாக இருக்கும். கால்களில் நீரில் ஒட்டாத மெல்லிய ரோமங்கள் காணப்படும். எனவே, நீரில் மிக வேகமாகத் தாவி ஓடும். சிறு அசைவு ஏற்பட்டாலும், விரைவாக அந்த இடத்தில் இருந்து விலகிச் சென்று விடும். 45 நாட்கள் வரை உயிர் வாழும். நீரில் விழும் குருத்துப்பூச்சிப் புழுக்கள், தத்துப்பூச்சிக் குஞ்சுகள் முதலியவை இதன் இரையாகும்.
முதுகுமுள் நாவாய்ப் பூச்சி
இது தோற்றத்தில் கதிர்நாவாய்ப் பூச்சியை ஒத்திருக்கும். குறுகலான தலைப் பகுதியையும், வெளியில் நீட்டிய கண்களையும், சற்று அகலமான மத்திய வயிற்றுப் பகுதியையும் கொண்டிருக்கும். கழுத்தின் கீழ், முட்களைப் போன்ற மூன்று அமைப்புகள் காணப்படும். நெற்பயிரைத் தாக்கும் புழுக்களின் உடலில் தன் ஊசியான வாயால் குத்தி விஷத்தைச் செலுத்தி இரையை உண்ணும். தத்துப்பூச்சிகள் இதன் இரையாகும்.
பொறி வண்டு
பொறிவண்டு அரை வட்டமாகவும், உடைக்கப்பட்ட பட்டாணி வடிவத்தையும் ஒத்திருக்கும். உடலானது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்திலும், கறுப்பு நிறத்தில் வட்டமான புள்ளிகளுடனும் அல்லது புள்ளிகள் இல்லாமலும் காணப்படும். புழுவானது நீண்ட உடலமைப்பில் கரும் பழுப்பில் வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கும். உடல் பல கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். இரையை மென்று விழுங்கும் விதத்தில் வாய் இருக்கும். பகலில் சுறுசுறுப்புடன் பயிர்களில் அமர்ந்திருக்கும் அல்லது சுற்றித் திரியும். 70 நாட்கள் வரையில் வாழும். முட்டைக் குவியல்கள், சிறிய புழுக்கள், தத்துப் பூச்சிகள் ஆகியன இதன் இரையாகும்.
தரை வண்டு
இதன் உடல் சற்று நீண்டும், மார்பு சிறுத்தும் இருக்கும். உடலில் பளபளப்பான கோடுகள் அல்லது புள்ளிகள் காணப்படும். இரையை மென்று உண்ணும் வகையில் வாய் இருக்கும். தரையில் வேகமாக ஓடும் ஆற்றல் மிக்க கால்கள் இருக்கும். தண்டுகளின் அடியிலும், நீர் தேங்காத இடத்திலும் காணப்படும். இரவில் சுறுசுறுப்பாக இயங்கும். இலைமடக்குப் புழுக்களை விரும்பி உண்ணும். தத்துப்பூச்சிக் குஞ்சுகள், குருத்துப் பூச்சிகள், படைப்புழுக்கள், குருத்து ஈக்கள் ஆகியன இதன் இரையாகும்.
தரை நீள்வண்டு
தலை மற்றும் முன்வயிறு சிவப்பாகவும், மார்பு மற்றும் வயிற்றின் நுனிப்பகுதி கறுப்பாகவும் இருக்கும். பயிரின் எல்லாப் பகுதிகளிலும், நீரிலும் தரையிலும் காணப்படும். நீர்ப் பற்றாக்குறை உள்ள வயல்களில் அதிகமாகக் காணப்படும். இரையை மென்று விழுங்கும். இரவில் இரையைச் சுறுசுறுப்பாகத் தேடும். இளம் புழுக்கள் மற்றும் தத்துப் பூச்சிகள் இதன் இரையாகும்.
பச்சை மிரிட் நாவாய்ப்பூச்சி
இது, அளவில் சிறிதாக இருக்கும். தலையும் கழுத்தும் கறுப்பாகவும், முதுகு பச்சையாகவும் இருக்கும். இறக்கைகள் மெல்லியதாக, கண்ணாடியைப் போல இருக்கும். நீண்ட உணர்வுக் கொம்புகள் இருக்கும். முட்டைகளை இலையின் உள்ளே இடும். புகையான், தத்துப் பூச்சிகள் மற்றும் அவற்றின் குஞ்சுகள். இலைமடக்குப் புழுக்கள், கொம்புப் புழுக்கள், ஸ்கிப்பர் புழுக்கள் ஆகியன இதன் இரையாகும்.
முனைவர் இராஜா.ரமேஷ்,
உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம்,
வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.