நீரை மிச்சப்படுத்த உதவும் அலைப் பாசன முறை!

Alai-pasanam

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021

லைப் பாசனம் என்பது நீண்ட சால்களில் பாசனநீரை, 50 முதல் 250 மீட்டர் நீளம் வரையுள்ள சால்களில், குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுப் பாசனம் செய்யும் முறையாகும். அதாவது, 50 மீட்டருக்கு மேல் நீளமுள்ள நிலங்களில் மட்டும் செய்யக் கூடிய தரைவழிப் பாசன முறையாகும். ஒவ்வொரு சாலுக்கும் பாசனம் செய்வது தனித்தனியே முறைப்படுத்தப்படும்.

அனுகூலம்

வழக்கமாகச் சிறு பாத்திகளில் சால்களை அமைத்துப் பாசனம் செய்யும் போது, ஒவ்வொரு பாத்திக்கும் பாசனநீரை எடுத்துச் செல்ல, குறுக்கு வாய்க்கால்களை அமைக்க வேண்டும். இந்த வாய்க்கால்கள் பயிரிடத் தகுதி வாய்ந்த நிலப்பரப்பில் 15-20%ஐ எடுத்துக் கொள்ளும். மேலும், பாசனத்தின் போது, வாய்க்கால்களை நனைப்பதால் 20% நீரிழப்பு ஏற்படும். அடுத்து, நீரானது செங்குத்தாக மண்ணுக்குள் செல்வதால் பயிர்களுக்குக் கிடைக்காமல் வீணாகும்.

அலைப் பாசன வடிவமைப்பு

இம்முறையில், நிலத்தின் நீள வாட்டத்தில், சீரான, மென்மையான சரிவுடன், சால்கள் அமைக்கப்படும். சரிவின் தலைப்பகுதியில் சால்களுக்குக் குறுக்கே தலை வாய்க்காலும் அமைக்க வேண்டும். பிறகு, இந்த வாய்க்காலுக்கும் சாலுக்கும் இடையிலுள்ள கரையில் 32 முதல் 50 மி.மீ. வரை விட்டமுள்ள நெகிழிக் குழாயைப் பதிக்க வேண்டும்.

பாசன வேகம் நொடிக்கு ஒரு லிட்டர் என இருக்கும் போது 32 மி.மீ. குழாயையும்; ஒன்றரை லிட்டர் வேகத்தில் இருக்கும் போது 40 மி.மீ. குழாயையும்; இரண்டு லிட்டர் வேகத்தில் இருக்கும் போது 50 மி.மீ. குழாயையும் பயன்படுத்தலாம். இக்குழாயின் நீளம் 40 முதல் 50 செ.மீ. வரை இருக்கலாம். நீரைக் கட்டுப்படுத்த இக்குழாயின் தலைப்பகுதியில், எளிதாக மூடித் திறக்கும் மூடியால் மூட வேண்டும்.

அலைப் பாசனத்தின் செயல்பாடு

ஒவ்வொரு சாலிலும் விடப்படும் நீரின் அளவானது, மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை, சாலின் நீளம், சாலின் அகலம், கிணறு அல்லது கால்வாயில் இருந்து கிடைக்கும் நீரின் வேகம், பாசனநீரைத் திறந்து விடும் காலம் மற்றும் மூடி விடும் காலம், பாசனநீரின் சுழற்சி விகிதம், மொத்தச் சுழற்சிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

பாசனநீரின் சுழற்சி நேரம் என்பது, ஒருமுறை பாசனநீரைத் திறந்து விடும் காலமும், ஒருமுறை பாசனநீரை மூடிவிடும் காலமும் சேர்ந்ததாகும்.  பாசனநீரை மூடும் காலம், வழக்கமாகப் பாசனநீரைத் திறந்து விடும் காலத்தின் மடங்காக இருக்கும். இதன் அடிப்படையில் சாலில் விடப்படும் நீரின் அளவு நொடிக்கு ஒன்று முதல் இரண்டரை லிட்டர் வரை இருக்கும். 

சுருங்கக் கூறினால், சாலில் விடப்பட்ட நீர், முதல் சுழற்சியின் போது 20-30 மீட்டர் தூரம் சென்றிருக்க வேண்டும். பாசனநீரின் சுழற்சி விகிதம் என்பது, ஒருமுறை பாசனநீரைத் திறந்து விடும் காலத்துக்கும், ஒருமுறை பாசனநீரை மூடிவிடும் காலத்துக்கும் உள்ள விகிதம் ஆகும். இரண்டும் சமமாக இருக்கும் போது சுழற்சி விகிதம் 1:1 ஆக இருக்கும். இது, குறைந்தளவு சுழற்சி விகிதம் ஆகும். 1:2 அல்லது 1:3 வரை பயன்படுத்த முடியும்.

பாசனம் செய்தல்

ஒவ்வொரு சாலிலும் விடப்படும் நீரின் அளவு, கிடைக்கும் நீரின் வேகத்தைக் கொண்டு, ஒரே சமயத்தில் எத்தனை சால்களில் நீரைப் பாய்ச்ச முடியும் என முடிவு செய்ய வேண்டும். சாதாரணமாகக் கிணறுகளில் பயன்படுத்தப்படும் 3-5 குதிரைத் திறனுள்ள நீரேற்றிகளில் இருந்து, நொடிக்கு 3-7.5 லிட்டர் நீர் வெளியேறும். இதைக் கொண்டு ஒரே சமயத்தில் 2-5 சால்களில் நொடிக்கு 1.5 லிட்டர் வேகத்தில் அலைப் பாசனம் செய்யலாம். 

பிறகு, பாசனநீரின் சுழற்சி விகிதத்தின் அடிப்படையில், ஒரு சுழற்சியில் மொத்தம் எத்தனை சால்களில் பாசனநீரை விட வேண்டுமென முடிவு செய்ய வேண்டும். இது 4 முதல் 10 வரை இருக்கும். தற்போது தலைவாய்க்காலில் ஒரு சுழற்சிக்கு உட்பட்ட சால்களின் எல்லையை, குறுக்கு வரப்பை வைத்து முடிவு செய்ய வேண்டும்.

இப்போது சால்கள் அலைப் பாசனத்திற்கு தயாராக உள்ளன. தலைவாய்க்காலில் பாசனநீரை விட்டதும் குறுக்கு வரப்புகளுக்கு மத்தியில் நீர் தேங்கத் தொடங்கும். நீர் நெகிழிக் குழாயின் உயரத்தைத் தொட்டதும் எத்தனை சால்களுக்கு ஒரே சமயத்தில் பாசன நீரை விட வேண்டுமோ அந்தச் சால்களில் நீரை விடும் மூடிகளைத் திறக்க வேண்டும். 

தலைவாய்க்காலில் இருந்து பாசனநீரை முதலில் திறந்து விடும் காலத்தின் போது, 2 முதல் 5 சால்கள் வரையான முதல் தொகுதி சால்களில் முதல் அலையாகப் பாயும். முதலில் திறந்து விடும் காலம் முடிந்ததும் இரண்டாம் தொகுதி சால்களின், அதாவது, அடுத்த 2 முதல் 5 சால்களின் நீரை விடும் மூடிகளைத் திறக்க வேண்டும். உடனடியாக முதல் தொகுதி சால்களில் நீரை விடும் மூடிகளை மூடிவிட வேண்டும். 

இதைச் செய்ய 10-30 வினாடிகள் ஆகும். இரண்டாம் திறந்து விடும் காலம் முடிந்ததும் முதல் தொகுதி சால்களின் மூடிகளைத் திறந்து இரண்டாம் தொகுதி சால்களின் மூடிகளை மூடிவிட வேண்டும். இப்போது இரண்டாம் சுழற்சித் தொடங்கி முதல் தொகுதி சால்களில் இரண்டாம் அலையாக நீர் பாயும். இதைப் போல, மீதமுள்ள சுழற்சிகளையும் முடிக்க வேண்டும். ஓர் அலைப் பாசனத்தில் 5-10 சுழற்சிக் காலங்கள் இருக்கலாம்.

ஆய்வு முடிவுகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், சூரியகாந்தி, மக்காச்சோளம், கரும்பு, கத்தரி ஆகிய பயிர்களில், அலைப்பாசன முறையில் நடந்த ஆய்வுகளை, பாத்திப் பாசனத்துடன் ஒப்பிட்ட போது, அலைப்பாசன முறையில் சமமான அல்லது சற்றுக் கூடுதலான மகசூல் கிடைத்தது. 15-20% நீர் மீதமானது. பாசன நேரம் 15-20% குறைந்தது. வேலையாள் தேவையும் குறைவாக இருந்தது.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் .வேங்கடலட்சுமி,

முனைவர் வ.கருணாகரன், முனைவர் அ.வேலாயுதம்,

வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading