அசோலா உற்பத்தி முறைகள்!

அசோலா

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020

ற்போது குறைந்தளவே மழை பெய்வதாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருவதாலும், மாற்றுத் தீவனங்களைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தினால், தீவனத் தட்டுப்பாட்டையும், தீவனச் செலவையும் குறைக்கலாம். இவ்வகையில், இரசாயனக் கலப்பில்லாத அசோலா, அனைத்துக் கால்நடைகளுக்கும் ஏற்ற மாற்றுத் தீவனமாக அமைகிறது.

அசோலாவிலுள்ள சத்துகள்

அசோலாவில் 25-30% புரதச்சத்து, 14-15% நார்ச்சத்து, 3-4% கொழுப்புச்சத்து, 45-50% மாவுச்சத்து மற்றும் தாதுப்புகள், நுண்ணூட்டங்கள் உள்ளன. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாதுப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துகளும் உள்ளன. பீட்டா கரோட்டின் நிறமியானது வைட்டமின்-சி உருவாவதற்கான மூலப்பொருளாக உள்ளது. இதனால், கோழிகளில் நோயெதிர்ப்புச் சக்தி மிகுவதுடன், அசோலாவைச் சாப்பிட்ட கோழியின் முட்டைகளை உண்பதால் கண் பார்வைக்கும் நல்லது.

கால்நடைத் தீவனத்தில் சேர்க்கப்படும் மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள், புண்ணாக்குப் போன்றவற்றின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால், கால்நடை மற்றும் கோழித்தீவனச் செலவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே உள்ளது. ஆகவே, புரதம் மிகுந்த அசோலாவைக் கறவை மாடுகள் மற்றும் கோழிகளுக்கு நிரந்தர மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.  

உற்பத்தி முறைகள்

நெல்வயல், நெல் நாற்றங்கால் முறை: நெல் வயலில் ஒரு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ அசோலா வீதம் இட்டு, 5 செ.மீ. நீரை நிறுத்தினால், இரண்டு வாரத்தில் அந்த இடம் முழுவதும் வளர்ந்து விடும்.

சில்பாலின் தாள் விரிக்கப்பட்ட குழிமுறை: அசோலா, நீரில் மிதக்கும் பெரணியாகும். அனபீனா அசோலா என்னும் நீலப்பச்சைப் பாசியுடன் இணைந்து தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழமுள்ள பாத்தியை அமைக்க வேண்டும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தைச் சீராக விரிக்க வேண்டும். அதன் மேல் 2 செ.மீ. அளவில் மண்ணை இட வேண்டும்.

பிறகு, இதில் 2 செ.மீ. அளவில் நீரை நிரப்ப வேண்டும். இதில், 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ பசுஞ்சாணத்தைக் கரைத்து இட வேண்டும். அடுத்து 5 கிலோ அசோலாவை இட வேண்டும். தினமும் காலை அல்லது மாலையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்கிவிட வேண்டும். இதனால், மண்ணிலுள்ள சத்துகள் நீரில் கரைந்து அசோலாவுக்கு எளிதாகக் கிடைக்கும்.

இரண்டு வாரத்தில் 30-50 கிலோ அசோலா தயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவைப் பாத்தியிலேயே விட்டுவிட்டு இரண்டு பங்கை அறுவடை செய்யலாம். பத்து நாட்களுக்கு ஒருமுறை 5 கிலோ பசுஞ்சாணத்தைக் கரைக்க வேண்டும். பூச்சித் தொல்லை இருந்தால், ஒரு லிட்டர் நீரில் 5 மில்லி வேப்ப எண்ணெய்யைக் கலந்து பாத்தியில் தெளிக்க வேண்டும்.

மூன்று நான்கு பாத்திகளை அமைத்தால், தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்தும் சுவையும் மிகுந்த உணவாகக் கொடுக்கலாம். பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ கொடுக்கலாம். முதன் முதலில் பச்சையாகக் கொடுக்கும் போது அதை உண்பதற்குக் கால்நடைகள் தயக்கம் காட்டலாம். எனவே, தொடக்கத்தில்  அசோலாவைத் தவிடு அல்லது புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.

சிமெண்ட் தொட்டிமுறை

10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழமுள்ள சிமெண்ட் தொட்டியில் 25-30 கிலோ மண்ணைப் பரப்ப வேண்டும். பிறகு, இதில் 5 கிலோ மட்கிய சாணம், 100 கிராம் பாறைப் பொடி அல்லது ஆழ்குழாய்க் கிணறு போட்ட இடத்தில் கிடைக்கும் பாறை மண் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். இதில் 5 செ.மீ. அளவில் நீரை நிறுத்தி 5 கிலோ அசோலாவை இட்டால், இரண்டு வாரத்தில் 35-40 கிலோ அசோலாவைச் சேகரிக்கலாம். பத்து நாட்களுக்கு ஒருமுறை சாணக்கரைசலை ஊற்ற வேண்டும்.

அசோலா தீவனத்தால் முட்டைக் கோழிகளில் முட்டை உற்பத்திக் கூடும். அசோலாவை உண்ணும் கோழிகளில் 89% முட்டை உற்பத்தி உள்ளது. இதுவே, அடர் தீவனமிட்ட கோழிகளில் 83.7% முட்டை உற்பத்தி உள்ளது. 122 கிராம் அசோலாவைத் தருவதால், அடர் தீவனத்தை எடுத்துக் கொள்ளும் அளவில் 106 கிராம் குறைகிறது.

ஒரு கிலோ அடர் தீவனத்தின் விலை 17 ரூபாய். இங்கே அசோலாவைத் தீவனமாகக் கொடுப்பதால், அடர் தீவனச் செலவில் 13% குறைகிறது. அதாவது, ஒரு நாளில் ஒரு கோழிக்கான அடர் தீவனச் செலவில் 10 பைசா குறையும். இதனால், 10 ஆயிரம் கோழிகள் உள்ள பண்ணையில் ஒருநாள் தீவனச் செலவில் 1000 ரூபாய் குறையும். மேலும், கோழி வளர்ப்பில் இடையூறாக விளங்கும் இராணிக்கெட் நோயை ஓரளவில் கட்டுப்படுத்தலாம்.

கறவை மாடுகளுக்கு அசோலாவைத் தீவனமாக அளிப்பதால் பாலுற்பத்தி 15-20% மிகுவதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச் சத்தும் 10% வரை உயருகிறது. கொழுப்பல்லாத திடப்பொருளின் அளவு 3% வரை கூடுகிறது. இந்த அசோலாவை, ஆடுகள், பன்றிகள், வான்கோழி, மீன்கள் மற்றும் முயல்களுக்கும் அளிக்கலாம்.

நெல்லுக்கு உரம்

அசோலா ஓர் உயிர் உரமாகும். காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகிக்கும் திறனுடையது. இதில் 4.5% தழைச்சத்து உள்ளது. ஆகவே, நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 200 கிலோ இடலாம். இதனால், பயிருக்குத் தழைச்சத்து கிடைப்பதுடன் 15-20% மகசூலும் உயர்கிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட அசோலாவை விவசாயிகள் அனைவரும் வளர்த்துப் பயனடையலாம்.


அசோலா NAZIYA BEGAM

முனைவர் சி.நாசியாபேகம்,

முனைவர் அ.முகமது அஸ்ரப், வேளாண்மை அறிவியல் நிலையம்,

திரூர், திருவள்ளூர்-602025.  

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading