காது கேளாமை குணமாக சுக்கு அருமருந்து!

Ginger_dry

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018

காலையில் இஞ்சி; கடும்பகல் சுக்கு; மாலையில் கடுக்காய்; மண்டலம் உண்ணக் கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்பது பழந்தமிழ் மூலிகைப் பாடல். இதிலிருந்து சுக்கின் அருமையைத் தெரிந்து கொள்ளலாம்.

வெற்றிலைப் பழக்கம் உள்ளவர்கள், சுக்கு, வால்மிளகு, ஏலம், ஜாதிப்பத்திரி, இலவங்கம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் உடல் ஒளிரும். பசி உண்டாகும்.  இந்திரியம் பெருகும். இருமல், கோழை நீங்க, சுக்குச்சாறு, ஏலம், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய், பன்னீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டும். பிறகு இதில் தேனைக் கலந்து பாகாக்கி, கண்ணாடிப் புட்டியில் காற்றுப் புகாமல் பாதுகாப்பாக வைத்திருந்து சிறிதளவு எடுத்துச் சில நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.

தாது புஷ்டிக்கு, சுக்குச்சாறுடன் கோழிமுட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து காய்ச்சிக் குடித்துவர வேண்டும். விக்கல் நீங்க, சுக்கு, திப்பிலி, இலவங்கப் பட்டையைச் சம அளவு எடுத்து, கஷாயமாக்கி, காலையிலும், மாலையிலும் குடிக்க வேண்டும். நினைவாற்றல் பெருக, சீரகம், திப்பிலி, மஞ்சள், அதிமதுரம் கோஷ்டம், இந்துப்பு, கரிமஞ்சள், ஓமம், வசம்பை, வகைக்கு 10 கிராம் எடுத்துப் பொடித்துச் சூரணமாக்க வேண்டும். இதில் பசு நெய்யைச் சிறிதளவில் சேர்த்து தினமும் காலையில் உண்ண வேண்டும்.

கப, வாத, பித்தத்தால் ஏற்படும் தோஷங்களைக் குணப்படுத்தும். இஞ்சித் துவையல் அல்லது பச்சடி, வயிற்றுவலி, மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து. இஞ்சியைச் சுட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பில் தேய்த்துத் தின்றால், பித்தம், கபத்தால் வரும் நோய்கள் குணமாகும்.     பித்த நோய், இருமல், மலச்சிக்கல், வயிற்றுவலி நீங்க, ½ அவுன்ஸ் இ்ஞ்சிச் சாற்றில் சிறிதளவு உப்பைக் கலந்து காலையில் குடித்தால் குணம் தெரியும். இஞ்சியையும், வெல்லத்தையும் சேர்த்து உண்டால் வாத சிலேஷ்டைகளின் வலிமை குன்றும்.

கருத்தடைக்கு இஞ்சி, மிளகு, திப்பிலி, நாகேஸ்வரம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்துப் பசு நெய்யுடன் சேர்க்க வேண்டும். பிறகு அதைக் காய்ச்சிப் பாகாக்கி, மாதவிடாய்க் காலத்தில் மூன்று நாட்களுக்கு உண்ண வேண்டும். இஞ்சிச் சாற்றையும், பாலையும் நன்கு காய்ச்சி, வெல்லம், நெய், திப்பிலிப் பொடி ஆகியவற்றைக் கலந்து உண்டால் கர்ப்பிணிகளுக்கு இடுப்பு நோய் வராது.

காது கேளாமை குணமாக

இஞ்சி, உள்ளிப்பூண்டு, முருங்கைவேர், முள்ளங்கி, வாழைக்கிழங்கு ஆகியவற்றைச் சாறெடுத்து அத்துடன் மூன்று பங்கு கடுகு எண்ணெய்யைக் கலந்து நன்றாகக் காய்ச்சிக் காதுக்குள் விட்டு வந்தால், காது கேளாமை மறையும். வயிற்றுக் கோளாறுகளுக்கு இஞ்சிச் சாற்றுடன் பாலைக் கலந்து காய்ச்சி உண்டால் குணம் தெரியும்.

இஞ்சி லேகியம் தயாரித்தல்

தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகள் 480 கிராமை, பசு நெய்யில் சிவக்க வறுக்க வேண்டும். 30 கிராம் மிளகுத்தூள், 10 கிராம் திப்பிலிப்பொடி, 10 கிராம் மூங்கில் உப்புத்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்க வேண்டும். பிறகு இதில், சித்திர மூலம், ஜாதிக்காய், ஏலக்காய், சுக்குப்பொடியை, வகைக்கு 25 கிராம் வீதம் கலந்து, 480 கிராம் வெல்லத்தைப் போட்டுப் பக்குவமாகக் காய்ச்சினால் லேகியம் தயார். இதை நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் 5 கிராமளவில் உண்டு வந்தால், வாந்தி, பித்தம், பசியின்மை மறைந்து, உணவின் மீது ஆசை உண்டாகும்; உடலுக்கும் வலுவைத் தரும்.


காது கேளாமை SATHISH G 2

முனைவர் கோ.சதீஸ்,

முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் விஜயசாந்தி,

முனைவர் பி.யோகமீனாட்சி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர்-602025, 

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading