கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021
உலகளவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு 16 மில்லியன் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 12.5 மில்லியன் டன் கிழங்கு கிடைக்கிறது. இந்தியாவில் 0.02 மில்லியன் எக்டரில் 1.5 மில்லியன் டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தியில் பீகார், ஒடிசா, உ.பி. போன்ற மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச், மால்டோஸ், மேனோஸ் கிளாக்டோஸ், பென்டோஸ் போன்ற மாவுப் பொருள்கள், ஏ, பி, சி ஆகிய வைட்டமின்கள் உள்ளன. நூறு கிராம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறக் கிழங்கில் 5-20 மி.கி. கரோட்டீன் உள்ளது. இந்தக் கிழங்கு முக்கியமாக மனித உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. இதன் கொடிகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகின்றன.
மண்வளம் மற்றும் தட்பவெப்ப நிலை
எல்லா வகை மண்ணிலும் பயிரிடலாம். எனினும், மண்ணின் கார அமில நிலை 5.6-6.6 வரையுள்ள மணல் கலந்த இருபொறை மண் மிகவும் ஏற்றது. 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 75-100 செ.மீ. மழை இருந்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
பருவம்
வட இந்தியாவில் பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பயிரிடுகிறார்கள். தென்னிந்தியாவில் ஆடி, ஆவணி, அதாவது, ஜூன், ஜூலை; ஐப்பசி கார்த்திகை, அதாவது, செப்டம்பர் அக்டோபர்; மார்கழி, தை, அதாவது, நவம்பர், டிசம்பரில் பயிரிடுகிறார்கள்.
ஏற்ற இரகங்கள்
கோ.1, கோ.2, கோ.3 இரகங்கள் மற்றும் எச்.41, 41 ஆகிய வீரிய இரகங்கள் ஏற்றவை. இக்கிழங்கு, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஓர் எக்டர் நடவுக்கு 80 ஆயிரம் தண்டுகள் தேவைப்படும்.
தண்டுத் தேர்வு
பூச்சி, நோய் தாக்காத கொடிகளில் இருந்து நுனிக் கொடிகளை 20 செ.மீ. நீளத்தில் நறுக்கி, பார்களின் பக்கவாட்டில் நட வேண்டும். அதிக மகசூலுக்கு, கிழங்கை நட்டு நாற்றங்கால் அமைத்து, அதில் கிடைக்கும் நுனிக் கொடிகளை நடலாம். இதற்கு இரண்டு நாற்றங்கால்கள் தேவைப்படும். முதல் நாற்றங்காலில் 5-10 செ.மீ. ஆழத்தில் 60×25 செ.மீ. இடைவெளியில் கிழங்குகளை நட வேண்டும்.
பிறகு, 40-45 நாட்களில் முளைத்த கொடிகளை 20 செ.மீ. நீளத்தில் நறுக்கி, இரண்டாம் நாற்றங்காலில் அதே இடைவெளியில் நட வேண்டும். இவை நன்றாக வளர்ந்ததும் நறுக்கியெடுத்துப் பயிரிடும் நிலத்தில் நட வேண்டும். இந்தத் தண்டுகள் காயாமலிருக்க, நடவின் போது தாய்க் கொடிகளில் இருந்து நறுக்கி எடுக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 4-5 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 10 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் கரைகளை அமைத்து அவற்றின் பக்கவாட்டில், 44 கிலோ யூரியா, 260 கிலோ சூப்பர் பாஸ்பேட், 96 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட வேண்டும். 20 செ.மீ. இடைவெளியில் தண்டுகளை நட வேண்டும்.
பாசனம்
நீரைப் பாய்ச்சி நட வேண்டும். அடுத்து, மூன்றாம் நாளில் உயிர்நீர் விட வேண்டும். பிறகு, வாரம் ஒருமுறை நீரைப் பாய்ச்ச வேண்டும். நிலத்தில் நீரானது தேங்கினால் கொடிகள் அழுகி விடும்.
மேலுரமிடுதல்
நட்ட 30 நாட்கள் கழித்து எக்டருக்கு, 44 கிலோ யூரியா, 260 கிலோ சூப்பர் பாஸ்பேட், 96 கிலோ பொட்டாசை மேலுரமாக இட்டு, உடனே மண் அணைத்தல் அவசியமாகும்.
பின்செய் நேர்த்தி
கொடி நன்கு படரும் வரை நிலத்தைக் கொத்திக் களையெடுத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தரையில் படர்ந்திருக்கும் கொடிகளின் கணுக்களில் வேர்கள் தோன்றுவதைத் தடுக்க, நட்ட 60 நாளில் கொடிகளைப் புரட்டி விட வேண்டும். இதனால், நடவுத் தண்டு வேர்கள் நன்கு வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும். கிழங்கு மகசூல் கூடவும், நன்கு விளையவும், நட்ட 15 நாளில் இருந்து எத்ரல் என்னும் வளர்ச்சி ஊக்கியைத் தெளித்து வர வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
கூன்வண்டுகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, கோ.1 போன்ற இரகத்தைப் பயிரிட்டு 120-125 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். சுழற்சி முறையில் பயிரிட்டால் இந்த வண்டுகளின் தாக்குதலைக் குறைக்கலாம். கிழங்கு தோன்றத் தொடங்கியதில் இருந்து, 21 நாள் இடைவெளியில், எக்டருக்கு 625 மில்லி பென்தியான் அல்லது 1.25 கிலோ கார்பரில் 50% தூளைத் தெளித்து வர வேண்டும்.
அறுவடை
கிழங்கு நன்கு விளைந்துள்ளதை அறிய ஒன்றிரண்டு கொடிகளில் அறுவடை செய்து பார்க்கலாம். கிழங்கில் மண் ஒட்டாமல் இருப்பது, இலைகள் வாடி மஞ்சளாக இருப்பது, மண்ணில் வெடிப்புகள் தெரிவது ஆகியன, கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகி விட்டதற்கான அடையாளங்கள் ஆகும்.
கா.அருண்குமார்,
முனைவர் த.சுமதி, இ.ஆட்லின் விண்ணிலா, தோட்டக்கலைக் கல்லூரி,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.