தமிழ்நாட்டு நாய்கள்!

PB_Tamil dogs

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021

னிதன் விரும்பி வளர்க்கும் செல்லப்பிராணி நாய். இது, அனைத்துண்ணிப் பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்காகும். காடுகளில் வாழும் ஓநாய்களில் இருந்து, பழங்கால மனிதர்களால் வேட்டையாடி வீட்டுடைமை ஆக்கப்பட்ட விலங்கு. உலகெங்கிலும் உள்ள நாய்கள் ஒன்று போல் இல்லாமல், அளவு, நிறம், அமைப்பு, நடத்தை ஆகியவற்றில் மாறுபட்டு இருப்பதால், பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கென்னல் கிளப் என்னும் அமைப்பு, உலகெங்கும் உள்ள நாய்களை 350 இனங்களாகப் பிரித்துள்ளது.

கிராமப்புற மக்கள் வீடு, வயல் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக நாய்களை வளர்க்கின்றனர். நகரங்களில் வாழும் மக்கள், நண்பனாக, உதவியாளனாக, பொழுது போக்குக்காக, பாதுகாப்புக்காக, விளையாட்டுத் தோழமையாக நாய்களை வைத்துள்ளனர். மனிதனின் மன அழுத்தம், இரத்தக் கொதிப்பு போன்ற பல்வேறு இன்னல்களை, நாய் தனது வேடிக்கைச் செயல்களால் சமன்படுத்த உதவுகிறது. 

தன்னை வளர்ப்பவருக்குத் தன் ஆயுட்காலம் முழுவதும் நன்றியுள்ளதாக இருக்கிறது. புத்திக்கூர்மை மற்றும் மிகுந்த எச்சரிக்கை நிறைந்த விலங்கு.  மனிதர்களை விட நான்கு மடங்கு அதிகமாக ஒலியைக் கேட்கும் திறனும், பத்தாயிரம் மடங்கு மோப்ப ஆற்றல் திறனும் நாய்களுக்கு உண்டு.  எனவே, இது புலனாய்வு மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் காளைகளைப் போன்று நாட்டு நாய்களுக்கும் சிறப்பிடம் உண்டு. இந்தியாவில் அழகுக்காக, பகட்டான வாழ்க்கையை வெளிப்படுத்துவதற்காக வளர்க்கப்படும் அயல்நாட்டு நாய்கள் வளர்ப்பு அதிகமாகி விட்டது. இதனால், நம் நாட்டு நாய்கள் வேகமாக அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டு நாய்கள்

இராஜபாளையம் நாய்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் என்னும் ஊரில் இவ்வின நாய்கள் அதிகமாக உள்ளன. அகன்ற மார்பு, நீண்ட கால்கள், நீண்ட வால், தங்கநிறக் கண்கள், இளஞ்சிவப்பு மூக்குடன் வெள்ளை நிறத்தில் இருக்கும். உயரம் 27-30 அங்குலம், எடை 30-35 கிலோ இருக்கும். கூரிய பார்வையுள்ள வேட்டை நாயினம். பழங்காலத்தில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடவே பயன்படுத்தப்பட்டன. 

கர்நாடகப் போர்களில் இந்நாய்கள் ஆங்கிலேயரின் குதிரைப் படைகளை எதிர்க்கப் பயன்படுத்தப்பட்டன. இதற்கு அடையாளமாக இந்திய அரசாங்கம் இராஜபாளையம் நாயின் உருவத்தை அஞ்சல் தலைகளில் வெளியிட்டது.  அந்நியர்களைக் கடும் கோபத்துடன் தாக்கும். இவற்றைப் பூனை போன்ற மற்ற செல்லப் பிராணிகளுடன் சேர்த்து வளர்க்க முடியாது. இந்த நாய்களுக்கு உள்ள செவிட்டுத் தன்மை ஒரு குறையாகக் கருதப்படுகிறது.

கன்னிநாய்: தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கோவில்பட்டி, கழுகுமலை, சிவகாசி போன்ற இடங்களில் கன்னி நாய்கள் அதிகமாக உள்ளன. இவை ஆப்பிரிக்க சலுக்கி நாய்களைப் போன்று இருக்கும். இந்நாய்கள் கன்னி என்னும் ஆட்டினத்தை மேய்க்கவும் பாதுகாக்கவும் உதவின. மேலும், கன்னி ஆடுகளைப் போலவே இருப்பதால், பிற்காலத்தில் கன்னி நாய்கள் என அழைக்கப்பட்டன. 

இந்நாய்கள் கறுப்பு (கருங்கன்னி) மற்றும் கறுப்பு வெள்ளை நிறத்தில் (பால்கன்னி) காணப்படும்.  உயரம் 28-29 அங்குலம், எடை 30-35 கிலோ இருக்கும். அகன்ற மார்பு, மெல்லிய உடல், உடலை ஒட்டிய வயிறு, சுருண்ட மெல்லிய வாலைக் கொண்டிருக்கும். வேட்டையினத்தைச் சேர்ந்த இந்த நாய்களைக் கட்டிப் போட்டு வளர்க்கக் கூடாது.

சிப்பிப்பாறை நாய்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை என்னும் ஊரில் பிறந்தது சிப்பிப்பாறை நாய். இளமஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். மிதமான உருவம், மெல்லிய தாடை, உள்வாங்கிய வயிறு, அகன்ற மார்பு, சிறிய காதுகள் மற்றும் பெரிய கால்களுடன் இருக்கும். காட்டு முயலை மிஞ்சும் வேகத்தில் ஓடும். வேட்டைக்குப் புகழ் பெற்ற தமிழ்நாட்டு நாய்களுள் சிப்பிப்பாறையும் ஒன்று. 

இந்நாய்கள் தென் மாநிலங்களின் பழுப்பு வேட்டை நாய் எனப்படும். காட்டுப் பன்றி, மான் மற்றும் காட்டு முயல்களை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டன. புத்திக்கூர்மை மற்றும் காவல் திறன் கொண்ட நாய்களுள் சிப்பிப்பாறையும் ஒன்று.

கோம்பை நாய்: தேனி மாவட்டத்தின் கோம்பை என்னும் ஊரில் பிறந்தது கோம்பை நாய். எலிசபெத் மகாராணியின் அரண்மனையை அலங்கரித்த பொலிங்கா நாயும், மருது சகோதரர்கள் வளர்த்த நாயும் கோம்பையின நாயாகும். உடல் முழுவதும் செம்பழுப்பாகவும், மூக்கும் வாயும் கறுப்பாகவும் இருக்கும். கம்பீரமான உடல், கூரிய பற்கள், வலுவான தாடை மற்றும் பின்னங் கால்கள் இதன் சிறப்புகளாகும்.

எல்லை அமைத்துக் காட்டு விலங்குகளிடம் இருந்து கால்நடைகளைக் காப்பதில் கோம்பை நாய்கள் சிறந்தவை. இந்நாயை, இந்தியக் கரடி வேட்டை நாய் என்று கூறுவர்.  மோப்ப ஆற்றல், ஓடும் திறன் மற்றும் பார்வைத் திறன் மிக்கது கோம்பை நாய்.

அலங்கு நாய்: தஞ்சைப் பெரிய கோயிலின் கிழக்குக் கோபுரத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள உருவம், கோயிலின் உட்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியத்தில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம் அலங்கு நாயாகும்.  தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டச் செல்வந்தர்கள் மட்டுமே முற்காலத்தில் அலங்கு நாய்களை வளர்த்தனர். தன் எஜமானருக்கு மட்டுமே கட்டுப்படும் அளவில் வேகமிக்க நாய். உயரம் 27 அங்குலம், எடை 40-45 கிலோ இருக்கும்.

இவை இளஞ்சிவப்பு, இளமஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். உடல் நீண்டும் பெரிதாக, வால் கூர்மையாக, காதுகள் ஓரத்தில் வெட்டப்பட்டு இருக்கும். அலங்கு நாய்கள் வேட்டைக்கும் காவலுக்கும் தலை சிறந்தவை.  சிலர், வட மாநிலங்களில் வளர்க்கப்படும் புள்ளிகுட்டா, பஞ்சாப் மாஷ்டிவ், பாகிஸ்தானி மாஷ்டிவ் போன்ற நாய்களை, அலங்கு நாயென்று சொல்கின்றனர். ஆனால், உண்மையில் அலங்கு இன நாய்கள் அழிந்து விட்டன.

கட்டைக்கால் நாய்: தஞ்சைப் பெரிய கோயிலின் கிழக்குக் கோபுரத்தில், இரண்டு அலங்கு நாயின் சிற்பங்களுக்கு இடையில் கட்டைக்கால் நாய் உள்ளது. இந்நாய், நம் நாட்டின் குறுங்கால்களை உடைய நாய்களுள் ஒன்றாகும். இந்நாய்கள் தஞ்சை மாவட்டக் கிராமங்களில் உள்ளன. இந்நாய், நல்ல துணையாகவும், கண்காணிப்பு மிக்கதாகவும், விளையாட்டு விலங்காகவும் இருக்கும்.

உயரம் 15 அங்குலம், எடை 20-30 கிலோ இருக்கும். இளமஞ்சள், பழுப்பு, கறுப்பு மற்றும் சிவப்பாக இருக்கும். உடல் சிறிதாக, கால்கள் குட்டையாக, தடிமனாக வளைந்து இருக்கும். இந்நாய்கள், தொண்டையைக் குறி வைத்துத் தாக்கும். மோப்ப ஆற்றல் நிறைந்த நாய்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது கட்டைக்கால் நாய். மீன், கீரி, முயல், எலி மற்றும் பாம்புகளை வேட்டையாடும். இவ்வினம் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

செங்கோட்டை நாய்: தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் வாழ்ந்த மக்களால் வளர்க்கப்பட்ட இனமே செங்கோட்டை நாய்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டதாலும், சிவப்பாக இருப்பதாலும் இவை செங்கோட்டை நாய்கள் எனப்படுகின்றன. இந்நாய் 23-27 உயரம், 35-42 கிலோ எடை இருக்கும்.

மண்டை பெரிதாகவும், மூக்கும் வாயும் கறுப்பாகவும் இருக்கும். கூர்மையான பார்வை, அச்சுறுத்தும் வகையில் பாயும் தன்மையுடன், பெரிய புலியையே வேட்டையாடும் ஆற்றல் நிறைந்தது செங்கோட்டை நாய்.  இன்று அழிவில் உள்ள நாயினங்களில் இதுவும் ஒன்றாகும்.

மந்தை அல்லது மண்டை நாய்: தென் தமிழகத்தில் காணப்படும் அலங்கு, செங்கோட்டை, சிப்பிப்பாறை, கோம்பை, சிந்தி ஹவூன்ட், தோகை போன்ற நாயினங்கள் மந்தை நாய் இனத்தில் இருந்தே பரிணாமம் அடைந்தவை. மந்தை நாயின் பிறப்பிடம் இராமநாதபுரம் மாவட்டம் ஆகும். இந்நாய்கள் வெள்ளை, கறுப்பு, பழுப்பு நிறங்களில் இருக்கும். பெரிய தலை, நீண்ட மூக்கு, வலிமையான தாடை மற்றும் கால்கள், நீண்ட வால் மற்றும் காதுகள்ன் இருக்கும். 22-32 அங்குல உயரமும், 30-40 கிலோ எடையும் இருக்கும்.

பாண்டிய மன்னர்கள் மந்தை நாயின் உருவத்தை, பரமக்குடியில் உள்ள நயினார் கோயிலிலும், உத்தரகோசமங்கை சிற்பத்திலும், திருப்பழனிக் கோயிலிலும் செதுக்கி வைத்துப் பெருமை சேர்த்துள்ளனர். இது, கூர்மையான பார்வை மற்றும் மோப்ப ஆற்றல் கொண்ட நாயினம். காட்டு விலங்குகளை வேட்டையாடவும் ஆட்டு மந்தைகளைக் காக்கவும் இந்நாய்கள் பயன்படுத்தப் பட்டன.

மலையேறி நாய்: மேற்குத் தொடர்ச்சிமலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்பட்டு வந்தது மலையேறி நாய். உயரம் 22- 27 அங்குலமும், எடை 35 கிலோவும் இருக்கும். கட்டான மார்பு, வலிமையான தாடையுடன் கறுப்பு நிறத்தில் இருக்கும். காட்டு விலங்குகளிடம் இருந்து மக்களையும் ஆட்டு மந்தைகளையும் பாதுகாத்தது இவ்வினம். மலைகளில் வசிக்கும் காரணத்தால் இதன் கால்கள் மற்றும் பாதங்கள் மலைகளில் ஏறவும் இறங்கவும் ஏற்றாற் போல் வலிமையாக இருக்கும்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

ந.குமாரவேலு, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-07.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading