கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021
பயறு வகைகளில் அதிகளவில் சத்துகள் இருப்பதால், சீரான உணவில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால், பயறு வகைகளை, ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த் துளைப்பான் தாக்குவதால், அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த, பெரோமோன் என்னும் இனக்கவர்ச்சிப்பொறி பயன்படுகிறது.
இப்பொறிகளை எந்தெந்த உயரத்தில் அமைத்தால் எவ்வளவு பூச்சிகள் கட்டுப்படும் என்பதை அறிந்து கொண்டால், இப்பொறி, பூச்சிக் கட்டுப்பாட்டில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் முன் கணிப்புக்குச் சிறந்த கருவியாக அமையும்.
ஆராய்ச்சி முறை
புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள தேசிய பயறு ஆராய்ச்சி மையப் பண்ணையில் இருந்த துவரைப் பயிரில் பச்சைநிறப் புனல் இனக்கவர்ச்சி பொறிகள் வெவ்வேறு உயரங்களில் வைக்கப்பட்டன.
பிடிபடும் அந்துப் பூச்சிகள் வெளியேறாமல் இருக்க, இந்தப் பொறிகளில் உள்ள பிளாஸ்டிக்கின் நுனிப்பகுதி, கயிற்றால் குச்சியுடன் இணைத்துக் கட்டப்பட்டது.
இக்கயிற்றை வாரந்தோறும் கழற்றி, பிடிபடும் பூச்சிகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. இனக்கவர்ச்சிப் பொறிகளின் மையப் பகுதியில் ஹெலிலூர் பொருத்தப்பட்டது. இந்த லூர் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டது.
முடிவுகள்
பயிர் விதானத்தின் மட்டத்தில் வைக்கப்பட்ட ஐந்து பொறிகளில் அதிகளவாக 96.0 அந்துப் பூச்சிகள் பிடிபட்டன. பயிர் விதானத்துக்கு ஒரு அடி கீழே வைக்கப்பட்ட ஐந்து பொறிகளில் 94.8 அந்துப் பூச்சிகள் பிடிபட்டன. அடுத்து, பயிர் விதானத்துக்கு இரண்டடி கீழே வைக்கப்பட்ட ஐந்து பொறிகளில் 77.1 அந்துப் பூச்சிகள் பிடிபட்டன.
பயிர் விதானத்துக்கு ஒரு அடி மேலே வைக்கப்பட்ட ஐந்து பொறிகளில் 66.6 அந்துப் பூச்சிகள் பிடிபட்டன. பயிர் விதானத்துக்கு இரண்டடி மேலே வைக்கப்பட்ட ஐந்து பொறிகளில் மிகக் குறைவாக 58.9 அந்துப் பூச்சிகள் அந்துப் பூச்சிகள் பிடிப்பட்டன.
வெவ்வேறு உயரங்களில் நிறுவப்பட்ட பொறிகளின் செயல்திறன் வரிசை: பயிர் விதானத்தின் மட்டம், பயிர் விதானத்துக்கு ஒரு அடி கீழே, பயிர் விதானத்துக்கு இரண்டடி கீழே, பயிர் விதானத்துக்கு ஒரு அடி மேலே, பயிர் விதானத்துக்கு இரண்டடி மேலே வைக்கப்பட்ட பொறிகள்.
முடிவுரை
பயிர் விதானத்தின் மட்டத்தில் வைக்கப்பட்ட பச்சைப்புனல் பொறிகள் மற்றும் பயிர் விதானத்துக்கு ஒரு அடி கீழே வைக்கப்பட்ட பச்சைப்புனல் பொறிகளில் அதிக அந்துப் பூச்சிகள் ஈர்க்கப்பட்டன. இனக்கவர்ச்சிப் பொறிகள் நிறுவப்படும் உயரங்களின் மாற்றம், ஈர்க்கப்பட்ட அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உறுதியாகிறது.
ச.லேகா பிரியங்கா,
உ.பிரிதிவிராஜ், இ.பத்மஸ்ரீ, தி.சர்மிதா,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.