உயர் விளைச்சல் சிறுதானிய இரகங்கள் இலாபத்தை மட்டுமே கொடுக்கும்!

millet

அனுபவத்தைச் சொல்கிறார் மேட்டூர் விவசாயி கார்த்திகேயன்!

ரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கவும், உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்கவும் என, திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில், சிறுதானிய மகத்துவ மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் உருவாக்கிய உயர் விளைச்சலைத் தரவல்ல வரகு மற்றும் சாமையைப் பயிரிட்டு, நல்ல மகசூலை எடுத்துள்ளார், திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் விவசாயி கார்த்திகேயன்.

2016-2010 காலத்தில் டானி திட்டப் பயனாளியாக விளங்கிய இவர், தனது சிறுதானிய சாகுபடி அனுபவம் மற்றும் டானி திட்டத்தில் கிடைத்த உதவிகள் குறித்து நம்மிடம் கூறியதாவது:

“என் பெயர் கார்த்திகேயன், நான் கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள மோட்டூர் கிராமத்தில் வசிக்கிறேன். நான் முதலில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கும், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்துக்கும் மற்றும் சிறுதானியச் சுத்திகரிப்பு இயந்திரங்களை எங்களுக்கு இலவசமாகக் கொடுத்த தமிழக அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்க பக்கத்துல கேழ்வரகைத் தான் அதிகமா சாகுபடி செய்வோம். ஆனா, 2016 ஆம் ஆண்டுல, சிறுதானிய மகத்துவ மையப் பேராசிரியர் மற்றும் தலைவர் பரசுராமன் அய்யா, பேராசிரியர் நிர்மலா குமார் அம்மா,  உதவிப் பேராசிரியர் ஆனந்தியம்மா இவங்க எல்லாரும் எங்க ஊருக்கு வந்து, சிறுதானிய சாகுபடியைப் பத்தியும், உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்கள், ஊடுபயிர் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரிப்பைப் பத்தியுயும் தெளிவா சொல்லிக் கொடுத்தாங்க.

ஆனாலும், நாங்க முதல் இரண்டு வருஷம், டானி திட்டத்துல கொடுத்த வரகு, தினை, சாமை மற்றும் பனிவரகை கொஞ்சம் தயக்கத்தோட தான் பயிர் செஞ்சோம். அப்புறம் உயர் விளைச்சலைத் தரக்கூடிய அத்தியந்தல் சாமை, வரகு, பனிவரகு, தினை இரகங்களை எல்லாம் கொடுத்துப் பயிர் செய்யச் சொன்னாங்க. பயிர் செஞ்சு பார்த்தேன். அதுல முதல் இடம் வரகு மற்றும் சாமைக்குத் தான். 

ஏன்னா, நான் என்னோட நெலத்துல 1.50 ஏக்கருல வரகைப் போட்டுப் பார்த்தேன். களை எடுக்கல, உரம் எதுவும் போடல. ஆனா, நான் நெனைச்சுக் கூடப் பார்க்காத அளவுக்கு மகசூல் கெடச்சது. அறுபது கிலோ எடையுள்ள 30 மூட்டை வரகு, அதாவது, 1800 கிலோ வரகு மகசூலா கெடச்சது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஏன்னா, இதை வெதச்சப்போ, எங்க அக்கம் பக்கத்து விவசாயிக எல்லாம் என்னை ஒரு மாதிரியா கேலி செஞ்சாங்க.

ஏம்பா 1.50 ஏக்கரை வீணாக்கிட்டியே? சும்மா அரை ஏக்கருக்குப் போட வேண்டியது தான? சிறுதானிய சாகுபடி எல்லாம் நமக்கு ஒத்து வராதுப்பா.  வேற பயிர் எதையாவது பண்ணுன்னு சொன்னாங்க. ஆனா ஒரு சந்தோஷமான விஷயம் என்னன்னா, நானு நெல் அறுவடை மெஷின் மூலமா அறுவடை செஞ்சப்ப, என்னைக் கிண்டல் செஞ்சவங்களும், சுத்து வட்டாரத்துல இருந்தவங்களும் வந்து ஆச்சரியமா பார்த்தாங்க. 

ஏன்னா 1.50 ஏக்கரையும் ஒன்றரை மணி நேரத்துலயே அறுவடை செஞ்சு முடிச்சிட்டேன். இதையே ஆள்கள வச்சு அறுவடை செஞ்சிருந்தா, குறைந்தது 30 ஆள்கள் தேவைப்படும். கூலின்னு பார்த்தா ஒரு ஆளுக்கு 200 ரூவான்னு வச்சாலும் 6000 ரூவா செலவாயிருக்கும். அப்புறம் கதிரடிக்க, தானியத்த பிரிக்கற செலவு வேற ஆகியிருக்கும். ஆனா, இந்த மெஷின் அறுவடையில 3000 ரூவா தான் செலவாச்சு. எனக்கு நல்ல இலாபம் தான். 

பயிர் மழையிலயும் மாட்டல. சரியான நேரத்துல அறுவடையும் பண்ணி முடிச்சுட்டேன். இந்தப் பயிரை நான் விதைச்சதோட சரி. அடுத்து, நேரா அறுவடைக்கு வந்துட்டேன். ஏன்னா, டானி திட்டத்துல இலவசமா விதையைக் குடுத்துட்டாங்க. நான் மானாவாரியில தான் பயிர் செஞ்சேன். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலும் இல்ல. அதனால, வேற எந்த செலவும் எனக்கு ஆகல. 

இலாபக் கணக்குப் பார்த்தா, 1800 கிலோவுல 800 கிலோவை விதைக்காக வாங்கிட்டுப் போயிட்டாங்க. கிலோ முப்பது ரூபான்னு வித்தேன். அதுல, 24,000 ரூபா கெடைச்சது. மீதி 1000 கிலோவை அரிசியா அரச்சேன். அதுல 650 கிலோ அரிசி கிடைச்சது. அதை கிலோ 70 ரூபான்னு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில இருக்கற வியாபாரிக மூலமா வித்ததுல 45,500 ரூபா கெடைச்சது. மொத்தத்துல 69,500 ரூபா கெடைச்சது. 

அதுவும், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில இருக்கற மக்கள் எங்களோட அரிசியைச் சாப்பிடறத நெனைச்சா மனசுக்கு ரொம்ப நிறைவாவும், சந்தோஷமாகவும் இருக்கு. நான் வரகை அரிசியா அரைக்கறப்ப கெடைச்ச 200 கிலோ குருணையை எங்க சாப்பாட்டுக்கு வச்சுக்கிட்டோம். தவிட்டையும் வைக்கோலையும் எங்க மாடுகளுக்குத் தீவனமா வச்சுக்கிட்டோம்.

2,500 கிலோ வைக்கோல் கெடைச்சது. அதை கிலோ 2 ரூபான்னு வித்தாக்கூட 5,000 ரூபா கெடச்சிருக்கும். ஆனா இதையெல்லாம் நான் இலாபக் கணக்குல சேர்க்கல. இப்ப நீங்க, வரகை அரிசியா அரைச்சதுக்கு செலவாகி இருக்குமேன்னு கேட்கலாம்? ஆனா அரவைக் கூலியே இல்ல. எப்படின்னா, சிறுதானியச் சுத்திகரிப்பு இயந்திரங்களை டானி திட்டத்துல எங்க மோட்டூருக்கு இலவசமா குடுத்திருக்காங்க. அதுல அரைச்சு வித்ததால தான் இவ்ளோ இலாபம்.

இதைப் போலவே சாமையையும் விதைச்சு இலாபம் பார்த்தேன். எல்லாரும் இப்ப சிறுதானியங்களை, அதுவும் புது இரகங்களான அத்தியந்தல் சாமை 1, அத்தியந்தல் தினை 1, அத்தியந்தல் பனிவரகு 1 மற்றும் த.வே.ப.க. வரகு 86-ஐத் தான் கேட்டு வாங்கி விதைக்கிறாங்க. அதனால விவசாயிகளுக்கு நானு சொல்லிக்கிறது என்னன்னா, சிறுதானியங்கள விதைச்சா இலாபம் மட்டுமே கெடைக்கும். வேற எந்தப் பேச்சுக்கும் இடமே இல்ல’’ என்றார். இவருடன் பேச: 95663 38472.

மேலும் விவரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம். தொலைபேசி: 04175-298011.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading