நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!

PD_Dag

வெளியான இதழ்: ஜூன் 2021

ல்லீரல் என்பது நாய்களின் முக்கியமான உறுப்பாகும். இது, நாயின் அடிவயிற்றில் மிகப்பெரிய உறுப்பாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கல்லீர்லைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

கல்லீரலின் செயல்கள்

கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள் மற்றும் புரதங்களை வளர்சிதை மாற்றம் அடையச் செய்கிறது. மருந்துகளையும் வளர்சிதை மாற்றமடையச் செய்கிறது. அதாவது, வைட்டமின்களைச் சேமித்து, வளர்சிதை மாற்றம் செய்து செயல்படுத்துகிறது. தாதுகள், கிளைகோஜன் மற்றும் ட்ரைகிளிசரைட்களைச் சேமிக்கிறது. இரத்த உறைவு போன்ற பல்வேறு உடல் செயல்களுக்குத் தேவையான புரதங்களை உற்பத்தி செய்கிறது.

செரிப்பதற்குத் தேவையான பித்த அமிலங்களை உருவாக்குகிறது. உடலுக்குள் உற்பத்தியாகும் அம்மோனியா மற்றும் நாய்களால் நுகரப்படும் விஷம் போன்ற தீங்கு தரும் பொருள்களை நச்சுத்தன்மை அற்றதாக மாற்றுகிறது. நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.

கல்லீரலைத் தாக்கும் நோய்கள்

கடுமையான கல்லீரல் செயலிழப்பு: திடீரெனக் கல்லீரல் தனது செயல்பாட்டை இழக்கும். இது பெரும்பாலும் நரம்பியல் அறிகுறிகள் மற்றும் உறைதல் நிலையுடன் தொடர்புடையது. கல்லீரலில் திடீர்க் காயம் ஏற்படுவதால் அல்லது ஏற்கெனவே நோயுற்ற கல்லீரலில் காயம் ஏற்படுவதால், இந்நோய் உண்டாகிறது.

கல்லீரல் என்செபலோபதி: இது, நரம்பியல் நோய்களின் அறிகுறியாகும். இந்நோயின் காரணமாக, இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையைக் கல்லீரலால் வெளியேற்ற முடிவதில்லை. மந்தநிலை, அடிப்படைக் கட்டளைகளுக்குப் பதிலளிக்க இயலாமை, வட்டமிடுதல், தலையை அழுத்துதல், குறிக்கோளின்றி அலைதல், பலவீனம், மோசமான ஒருங்கிணைப்பு, பார்வையிழப்பு, அதிகப்படியான வீழ்ச்சி, முதுமை, சரிவு, கோமா ஆகியன இந்நோயின் அறிகுறிகளாகும்.

அசைட்டீஸ்: இது அடிவயிற்றில் திரவத்தைச் சேகரிக்கும் ஒரு நிலையாகும். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களில், கல்லீரலில் உயர் இரத்தழுத்தம், இரத்தத்தில் குறையும் புரதம், சோடியம் மற்றும் நீர் வளர்சிதை மாற்றத்தில் ஏற்றத்தாழ்வு உண்டாதல் காரணமாக இந்நோய் ஏற்படுகிறது.

உறைதல் குறைபாடுகள்: கல்லீரல் நோயால் பாதிக்கப்படும் நாய்களில் உறைதல் குறைபாடுகள் ஏற்படும். ஏனெனில், உறைதலுக்குக் காரணமான புரதங்களைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது. கூடுதலாக, செரிப்பதிலிருந்து உறைவதற்கு உதவும் வைட்டமின்களை உறிஞ்சும் தன்மையும் குறையும்.

உறைதல் சிக்கல்களுக்கு இரத்தம் அல்லது பிளாஸ்மாவை மாற்றுவதன் மூலம், தேவையான உறைதல் காரணிகளை வழங்க முடியும். உறைதல் திறனைக் குறைக்க அல்லது அதிகரிக்க, ஹெப்பரின் மற்றும் வைட்டமின் கே- யைப் பயன்படுத்தலாம்.

பாக்டீரிய தொற்று: கடுமையான கல்லீரல் செயலிழப்பு மற்றும் நீண்டகாலக் கல்லீரல் நோயுள்ள நாய்கள் பாக்டீரிய தொற்றுக்கு ஆளாகும்.

ஃபைப்ரோஸிஸ்: ஃபைப்ரோஸிஸ் என்பது, கல்லீரல் சுருக்கம் எனப்படும். சிரோசிஸ் என்பது கல்லீரலின் இயக்கத்தைச் சீரழிக்கும் தீவிர நோயாகும். ஆயினும், சில நேரங்களில் சரியான மருந்துகள் மூலம் ஃபைப்ரோஸிஸ் நோயைக் குணமாக்க முடியும்.

கல்லீரல் நோயின் அறிகுறிகள்

பசியிழப்பு, எடையிழப்பு, வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு, தாகம் மிகுதல், நிலையற்ற நடை, மஞ்சள் காமாலை, அதாவது, கண்கள், நாக்கு அல்லது ஈறுகள் மஞ்சளாக இருத்தல் ஆகியன கல்லீரல் நோயின் அறிகுறிகள் ஆகும்.

கல்லீரல் நோயைக் கண்டறிதல்

நாய்களின் கல்லீரல் நோயை அறிவதற்குப் பலவகையான இரத்த ஆய்வுகள் பயனில் உள்ளன. எக்ஸ் கதிர்கள் மற்றும் அல்ட்ரா சோனோகிராபி ஆய்வு மூலம் கல்லீரல் நோயின் அளவைத் தீர்மானிக்கலாம். கல்லீரல் திசு பயாப்ஸி முறையையும் பயன்படுத்தலாம். எவ்வளவு விரைவில் நோயைக் கண்டுபிடிக்கிறோம் என்பதைப் பொறுத்து, அதற்கான சிகிச்சை அமையும்.

உணவு மாற்றங்கள்

நாய்களின் கல்லீரலுக்குத் தேவையான சத்துகள் மற்றும் கலோரிகளை அளித்தால் கல்லீரல் நோய் குணமாகும். SAM-E அல்லது பால் திஸ்ட்டில் போன்ற கூடுதல் பொருள்கள், கல்லீரல் நோயைக் குணப்படுத்த உதவும். நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் பயன்படும். நாய்களில் உருவாகும் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகளை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றுவதன் மூலமும் நோயைக் குணமாக்கலாம்.


முனைவர் ரா.லட்சுமி,

உதவிப் பேராசிரியர், கால்நடை உடற் செயலியல் மற்றும் உயிர் வேதியியல் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி, சேலம்-636112.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading