கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021
காய்கறிப் பயிராகிய மரவள்ளி இப்போது தொழிற் பயிராக மாறி வருகிறது. உலகளவில் 14 மில்லியன் எக்டரில் பயிராகும் மரவள்ளிப் பயிர் மூலம் சுமார் 130 டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் 0.357 மில்லியன் எக்டரில் 5.57 மில்லியன் டன் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 70% கேரளத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் 70% உணவாகப் பயன்படுகிறது. தமிழகத்தில் 1.5 மில்லியன் டன் கிழங்கு விளைகிறது. இதில் 75% க்கு மேல் மாவு மற்றும் ஜவ்வரிசி தயாரிப்பில் பயன்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், ஆலைகளில் மூலப் பொருளாகப் பயன்படுகிறது. காகிதம், காகித அட்டைத் தயாரிப்பில், ஒட்டும் காகிதம் மற்றும் டேப் தயாரிப்பில் பயன்படுகிறது. மேலும், பஞ்சாலைகளில், எண்ணெய்க் கிணறு தோண்டுவதில், சாய ஆலைகளில், கட்டடத் தொழிலில், வேதியியல் தொழிலில், கனிமத் தொழிலில் பயன்படுகிறது.
இவற்றைத் தவிர, பிரக்டோஸ் சிரப், குளுக்கோ சிரப், டெக்ஸ்ரோஸ் மோனோ ஹைட்ரேட் டெக்ஸ், ரோஸ் அன்ஹைட்ரஸ், கோழி மற்றும் கால்நடைத் தீவனத் தயாரிப்பில் மரவள்ளிக் கிழங்கு பயன்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மரவள்ளியில் அதிக மகசூல் எடுப்பதற்கான உத்திகளைப் பார்ப்போம்.
மண்வளம், தட்பவெப்ப நிலை
கார அமில நிலை 5.0-6.8 வரையுள்ள மணல் கலந்த குறுமண் நிலம், களிமண் கலந்த மணற்சாரி நிலம் மரவள்ளி சாகுபடிக்கு ஏற்றவை. இது அதிக வறட்சியைத் தாங்கும் பயிர் என்பதால் எல்லா இடங்களிலும் விளையும். எனினும், 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள சூழலில் நல்ல மகசூலைத் தரும். 100-150 செ.மீ. மழையளவு இருந்தால் போதும். தென்னிந்தியாவில் மானாவாரிப் பயிராக விளைகிறது. கேரளம், கர்நாடகம், கன்னியாகுமரி, சேலம் போன்ற பகுதிகளில் 30 செ.மீ. மழையிலும் மரவள்ளி விளைகிறது.
ஏற்ற பருவம்
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆண்டு முழுவதும் மரவள்ளி சாகுபடிக்கான சூழல் இருப்பினும், ஆடி, ஆவணி, அதாவது, ஜூன் ஜூலை மலைப் பகுதிக்கும், ஐப்பசி கார்த்திகை, அதாவது, செப்டம்பர் அக்டோபர் சமவெளிப் பகுதிக்கும் ஏற்ற பருவங்களாகும். திருவண்ணாமலை, செங்கல்பட்டுப் பகுதிகளில் மார்கழி, தை, அதாவது, டிசம்பர் ஜனவரியில் பயிரிடலாம்.
ஏற்ற இரகங்கள்
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு இரகம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் பகுதியில், பர்மா, மலபார் போன்ற நாட்டு இரகங்கள்; திருவண்ணாமலை மாவட்டத்தில் முள்ளுவாடி, எச்.165 இரகங்கள் மற்றும் கோவைப் பகுதியில் கோ.1, கோ.2 போன்ற இரகங்களைப் பயிரிடலாம். இதைத் தவிர ஸ்ரீசகியா என்னும் எச்.2304, ஸ்ரீவிசாகம் என்னும் எச்.1687, மலயான் 4, எச்.97, எச்.226 போன்ற வீரிய இரகங்களும் பயிரிட ஏற்றவை. இறவையில் பயிரிட 17,777 கரணைகளும், மானாவாரியில் பயிரிட 27,777 கரணைகளும் தேவைப்படும்.
கரணைத் தேர்வும் நேர்த்தியும்
தரமான மரவள்ளிக் குச்சிகளின் நடுவில் இருந்து, 8-10 கணுக்கள் மற்றும் 15 செ.மீ. நீளத்தில் கரணைகளை எடுக்க வேண்டும். அடிப்பகுதி மற்றும் நுனிப் பகுதியில் கரணைகளை எடுக்கக் கூடாது. கரணைகளில் பிளவோ சேதமோ இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்தக் கரணைகளை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்த கலவையில் 15 நிமிடம் நனைத்தும்; ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் பொட்டாசியம் வீதம் கலந்த கரைசலில் 2 மணி நேரம் நனைத்தும்; 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 75 கிலோ மண், 150 லிட்டர் கலந்த கலவையில் முக்கியெடுத்தும், பார்களின் ஓரத்தில் செங்குத்தாக நட வேண்டும்.
சில பகுதிகளில் கரணைகளைப் படுக்கை வசத்தில் நடுகிறார்கள். இப்படி நட்டால் ஒவ்வொரு கணுவில் இருந்தும் கிளைப்பு ஏற்பட்டுப் பல செடிகளும், அவற்றில் கிழங்குகளும் உருவாவதால் தரமான கிழங்குகள் கிடைக்காது. இதனால், மகசூல் குறைந்து விடும். மேலும், செடிகள் கீழே சாயவும் நேரிடும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 4-5 முறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவுரத்தை இட வேண்டும். இரகத்துக்கு ஏற்ப, 75 செ.மீ. அல்லது 90 செ.மீ. அளவில் பார்களை அமைக்க வேண்டும். இறவைப் பயிருக்கு 75 செ.மீ., மானாவாரிப் பயிருக்கு 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். சகியா, விசாகம் போன்ற இரகங்களுக்கு 90 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.
அடியுரமாக, 30 கிலோ தழைச்சத்தைத் தரவல்ல 66 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்தைத் தரவல்ல 390 கிலோ சூப்பர் பாஸ்பேட், 75 கிலோ சாம்பல் சத்தைத் தரவல்ல 120 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். நடவு முடிந்ததும் 2 கிலோ அசோஸ்பயிரில்லத்தை 20 கிலோ தொழுவுரம் மற்றும் 20 கிலோ மணலில் கலந்து விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
இடைவெளி
பொதுவாகப் பாத்திகளில் 2.5 அடி இடைவெளியிலும், கிளை விட்டு உயரமாக வளரும் இரகமாக இருந்தால் 3 அடி இடைவெளியிலும் நட வேண்டும். மானாவாரிப் பயிருக்கு 2 அடி இடைவெளியில் கரணைகளை நட வேண்டும்.
பாசனம்
முதலில் நடவு நீர் விட வேண்டும். அடுத்து, மூன்றாம் நாள் உயிர்நீர் கொடுக்க வேண்டும். பிறகு, மண்வாகுக்கு ஏற்ப 7-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.
மேலுரம்
நட்ட 90 நாட்கள் கழித்து 66 கிலோ யூரியா, 120 கிலோ பொட்டாசை இட்டு, மண்ணை அணைத்துப் பாசனம் செய்ய வேண்டும். எக்டருக்கு 12.5 கிலோ வீதம் துத்தநாக சல்பேட்டை இட்டால் அதிக மகசூல் கிடைக்கும்.
பின்செய் நேர்த்தி
நட்ட 20 நாட்களில் முளைக்காத கரணைகளை நீக்கி விட்டுப் புதிய கரணைகளை நட்டு, சரியான இடைவெளியைப் பேண வேண்டும். நட்ட 20 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். மாதம் ஒருமுறை என ஐந்து மாதங்கள் வரையில் களைகளை அகற்ற வேண்டும். மூன்று மற்றும் ஐந்தாம் மாதத்தில் மண்ணை அணைத்து விட வேண்டும்.
ஊடுபயிர்
மரவள்ளியை நட்டதிலிருந்து கிழங்குகள் பிடிக்க 3-4 மாதங்கள் ஆவதால், இந்த இடைக்காலத்தில் வெங்காயம், கொத்தமல்லி, உளுந்து, நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக இட்டுக் கூடுதல் வருவாயைப் பெறலாம். இதை, மரவள்ளிப் பயிரில் இரண்டு வரிசைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில், 2 வரிசையில் 30×20 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.
மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தைத் தரும் 22 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்தைத் தரும் 130 கிலோ சூப்பர் பாஸ்பேட், 20 கிலோ சாம்பல் சத்தைத் தரும் 32 கிலோ பொட்டாசைக் கலந்து இட வேண்டும். நிலக்கடலையை 3.5 மாதங்களில் அறுவடை செய்தால் 1,200 கிலோ மகசூல் கிடைக்கும்.
மரவள்ளியைத் தாக்கும் நோய்கள்
மரவள்ளி அம்மை நோய்: இது, தமிழகத்தில் மரவள்ளி அதிகமாக விளையும், சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் தாக்குதல் 26 முதல் 78% வரையில் இருப்பதால் 80% மகசூல் இழப்பு ஏற்படும்.
இந்த நோய்க்கு உள்ளான செடிகள் சரியாக வளராமல், இலைகளில் சுருக்கங்களுடன் இருக்கும். நோய் முற்றிய நிலையில் கிழங்குகளில் வெடிப்பு ஏற்படும். இந்நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்கள், ஜனவரி முதல் மார்ச் வரையில் குறைவாக இருப்பதால், இந்தக் காலத்தில் நோய்த் தாக்கமும் குறைவாகவே இருக்கும். ஜூன் ஜூலையில் இந்த ஈக்கள் அதிகமாக இருப்பதால், நோய்த் தாக்கமும் மிகுதியாக இருக்கும்.
இலைப்புள்ளி நோய்: இது முதிர்ந்த இலைகளைத் தாக்கும். இதனால், செடிகள் செவ்வக வடிவில் புள்ளிகளுடன் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் பென்லேட் வீதம் கலந்து, நட்ட மூன்றாம் மாதத்தில் இருந்து மூன்று முறை தெளிக்க வேண்டும். மேலும், ஒரு சத போர்டோ கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பைட்டலோன் டைத்தேன் எம் 45 வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
வேரழுகல் நோய்: இது இளம் செடிகளைத் தாக்கும். நோயுற்ற செடியின் இலைகளும் கணுக்களும் அழுகி விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் நனையும் செரசான் வீதம் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
மரவள்ளியைத் தாக்கும் பூச்சிகள்
சிவப்புச் சிலந்தி: இதன் தாக்குதல் கோடையில் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு ஒரு கிலோ டெமிக் குருணை வீதம் இட வேண்டும்.
செதில் பூச்சி: இதன் தாக்குதல் மிகவும் அரிதாக இருக்கும். மேலும், இதனால் பாதிப்பு ஏதும் இருக்காது.
கரையான், எறும்பு: இவை, புதிதாக நட்ட கரணைகளைத் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 15 கிலோ வீதம் பி.எச்.சி. 10 சதத் தூளை இட வேண்டும்.
அறுவடை
குறுகிய காலப் பயிர்கள் 8.5-9 மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். இதர இரகங்கள் அறுவடைக்கு வரப் பத்து மாதங்கள் ஆகும்.
செடிகளைச் சுற்றி நிலத்தில் வெடிப்புகள் தோன்றுவதும், அடியிலைகள் பழுத்து மஞ்சளாக இருப்பதும், கிழங்கு நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருப்பதன் அறிகுறியாகும். முள் மண்வெட்டி அல்லது மண்வெட்டியால், கிழங்குகள் சேதமடையாமல் வெட்டியெடுக்க வேண்டும். அறுவடைக்கு மூன்று நாள் இருக்கும் போது பாசனம் செய்தால் அறுவடை செய்ய எளிதாக இருக்கும்.
அறுவடை செய்த கிழங்கை உடனே விற்றுவிட வேண்டும். இல்லாவிடில், கிழங்கில் நைட்ரஜன் சயனைடு என்னும் நச்சுப்பொருள் தோன்றி, உண்ண இயலாத பொருளாக மாறிவிடும்.
கா.அருண்குமார்,
முனைவர் த.சுமதி, தோட்டக்கலைக் கல்லூரி,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.