நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள பயறுவகைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, விவசாயிகள் தவறாமல் டி.ஏ.பி.கரைசலைத் தெளிக்க வேண்டும் என்று, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
நடப்புப் பருவத்தில், பயறுவகைப் பயிர்கள், சில இடங்களில் வளர்ச்சி நிலையிலும், சில இடங்களில் பூக்கும் நிலையிலும் உள்ளன. பயறுவகைப் பயிர் சாகுபடியில், விதை நேர்த்தி, உயிர் உரப் பயன்பாடு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரமிடுதல், ஒருங்கிணைந்த சத்து நிர்வாகம், பயிர்ப் பாதுகாப்பு போன்றவற்றைக் கடைப்பிடிக்காத நிலையில், குறைந்த மகசூலே கிடைப்பதால், விவசாயிகளுக்குப் போதிய வருமானம் கிடைப்பதில்லை.
குறிப்பாக, பயறுவகைப் பயிர்கள் பூக்கும் பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கியத் தொழில் நுட்பமான டி.ஏ.பி.கரைசல் தெளிப்பைச் செய்தாலே, அதிக மகசூலைப் பெற முடியும். பயறுவகைப் பயிர்களில் தெளிக்கப்படும் டி.ஏ.பி.கரைசல் மூலம், இலை வழியாகத் தழை மற்றும் மணிச்சத்துக் கிரகிக்கப்படும். இதனால், பூக்களின் எண்ணிக்கை கூடும், பூக்கள் உதிர்வது வெகுவாகக் குறையும். இதன் பயனாக, காய்கள் அதிகமாகப் பிடிக்கும், திரட்சியான விதைகள் கிடைக்கும், மகசூல் அதிகமாகும்.
ஒரு ஏக்கருக்குத் தேவையான 5 கிலோ டி.ஏ.பி. உரத்தை, 10 லிட்டர் நீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து, தேவையான அளவு நீரில் கலந்து, செடிகள் நன்கு நனையும் வகையில், கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இப்படி, பூப்பிடிக்கும் தருணத்தில் ஒருமுறையும், பிறகு 15 நாட்கள் கழித்து ஒருமுறையும் என, இருமுறை தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலையில் தான் டி.ஏ.பி. கரைசலைத் தெளிக்க வேண்டும். இதைத் தெளிக்கும் போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால், பயறுவகைப் பயிர்களில் 25 சதவீதம் வரை மகசூல் பெருகும். எனவே, அனைத்து விவசாயிகளும் தவறாது டி.ஏ.பி. கரைசலைத் தெளித்து அதிக மகசூலைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செய்தி: நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்.