செய்தி வெளியான இதழ்: 2017 மே.
நாட்டுக்கோழி வளர்ப்பு சுய வேலை வாய்ப்பைத் தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி உண்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இவற்றின் தேவை கூடி வருகிறது. அதனால், நல்ல விற்பனை வாய்ப்புள்ள தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பு விளங்குகிறது.
கோழிப்பண்ணைப் பராமரிப்புச் செலவில் 60-70 சதம் தீவனத்திற்கு மட்டுமே ஆகிறது. எனவே, கோழிகளின் வளர்ப்பு முறை மற்றும் பருவத்துக்கு ஏற்றவாறு, தேவையான சத்துகள் நிறைந்த தீவனத்தை அளித்தால், கோழிகளின் உற்பத்தி திறன் மேம்பட்டு, பண்ணையின் இலாபம் கூடும்.
தீவனத்தில் இருக்க வேண்டிய சத்துகள்
நாட்டுக்கோழித் தீவனத்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்புகள் மற்றும் வைட்டமின்கள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
தீவனப் பொருள்களும் அவற்றிலுள்ள சத்துகளும்
மக்காச்சோளம், கம்பு, சோளம், அரிசி, தானிய வகைகளில், மாவுச்சத்து உள்ளது. சோயா, நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய புண்ணாக்கு வகைகளில், புரதச்சத்து உள்ளது. அரிசி, கோதுமைத் தவிடு வகைகளில், நார்ச்சத்து உள்ளது. மீன்தூளில், புரதம், கால்சியம் உள்ளன. டைகால்சியம் பாஸ்பேட்டில், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளன. கிளிஞ்சலில் கால்சியம் உள்ளது. கால்சைட்டில் கால்சியம் உள்ளது.
வளர்ப்பு முறைக்கு ஏற்ற தீவன மேலாண்மை
நாட்டுக்கோழிகளைக் குறைந்த எண்ணிக்கையில் புறக்கடையிலும், அதிக எண்ணிக்கையில் தீவிர முறையில் பண்ணைகளிலும் வளர்க்கின்றனர்.
புறக்கடை வளர்ப்பில் தீவன மேலாண்மை
புறக்கடைக் கோழி வளர்ப்பில் தீவனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அரிசி, சோளம், கம்பு போன்ற தானியங்களையும், வயல்வெளிகளில் உள்ள புல், புழு, பூச்சிகளையும், வீட்டில் மீதமாகும் காய்கறிகள், கீரைகளையும் உண்டு வளர்கின்றன. இங்கே கோழிகளுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைப்பதில்லை. அதனால் உற்பத்தித் திறனும் குறைகிறது.
ஆகவே, கோழிகளுக்கு மேய்ச்சலுடன் அனைத்துச் சத்துகளும் அடங்கிய சமச்சீர் தீவனத்தை அளிக்க வேண்டும். ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு 50-60 கிராம் வீதம் அளிக்கும் போது, அதன் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். நல்ல தரமான முட்டைகள் கிடைப்பதுடன் குஞ்சு பொரிக்கும் சதவிகிதமும் மற்றும் இறைச்சிக் கோழிகளின் எடையும் அதிகரிக்கும்.
மேலும், அதிக புரதச்சத்துள்ள அசோலாவை உற்பத்தி செய்து தினமும் அளிக்கலாம். அசோலாவில் கால்சியமும் அதிகமாக உள்ளதால் முட்டையிடும் கோழிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும். பத்து சதம் வீதம் காய்ந்த கிழங்கு வற்றலை, நாட்டுக்கோழித் தீவனத்தில் கலந்து அளிக்கலாம். குறைந்த செலவில் பானைக் கரையானை உற்பத்தி செய்தும் கோழிகளுக்கு அளிக்கலாம்.
தீவிரமுறை வளர்ப்பில் தீவன மேலாண்மை
வணிக நோக்கில் வளர்க்கப்படும் இம்முறையில் பண்ணையை இலாபகரமாக நடத்த, தீவன மேலாண்மை மிக முக்கியமாகும். கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப, குஞ்சுகள், வளரும் கோழிகள் மற்றும் முட்டைக் கோழிகளுக்கு, சத்தில் மாற்றம் செய்து அளிக்க வேண்டும்.
குஞ்சுகளுக்கான தீவனம்
குஞ்சுகளுக்கான தீவனத்தில் புரதச்சத்து அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்க வேண்டும். கோழிக் குஞ்சுகள் சிறந்த முறையில் வளர்ச்சியடைய, முட்டையிலிருந்து குஞ்சுகள் வந்ததும் தீவனம் அளிக்கப்பட வேண்டும். தீவனத்தை உண்ண ஆரம்பித்ததும் குஞ்சுகளின் உணவுக்குடல் செயல்படத் தொடங்கும். இதன் மூலம் குஞ்சுகளுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்க ஏதுவாகும்.
நல்ல நோய் எதிர்ப்புத் திறனுள்ள குஞ்சுகள் நுண் கிருமிகளின் தாக்கத்திலிருந்து காக்கப்படும். மேலும், இந்தக் குஞ்சுகள் வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் பாதிக்கப்படாமல் நன்றாக வளர்ந்து, சிறந்த தீவன மாற்றுத் திறனை வெளிப்படுத்தும்.
வளரும் கோழிகளுக்கான தீவனம்
வளரும் பருவத்தில் உள்ள கோழிகளின் தீவனத்தில், குஞ்சுப்பருவத் தீவனத்தைக் காட்டிலும் புரதச்சத்துக் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்க வேண்டும்.
முட்டையிடும் கோழிகளுக்கான தீவனம்
முட்டைப் பருவக் கோழிகள் தீவனத்தில், நார்ச்சத்து அதிகமாகவும், கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் 2:1 என்னும் விகிதத்திலும் இருக்க வேண்டும்.
மாதிரித் தீவன அட்டவணை: வளர் பருவக் கோழிகள் – எட்டு வாரம் வரை
மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை ஆகிய தானிய வகைகள் 53 சதம். சோயா அல்லது கடலைப் புண்ணாக்கு 28 சதம். அரிசி அல்லது கோதுமைத் தவிடு 10 சதம். மீன்தூள் 5 சதம். டிசிபி 1 சதம். கால்சைட் 1 சதம். தாதுப்புக் கலவை 2 சதம்.
முட்டைப்பருவக் கோழிகள் – 9-22 வாரம் வரை
மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை ஆகிய தானிய வகைகள் 53 சதம். சோயா அல்லது கடலைப் புண்ணாக்கு 23 சதம். அரிசி அல்லது கோதுமைத் தவிடு 15 சதம். மீன்தூள் 6 சதம். டிசிபி 1 சதம். கால்சைட் 1 சதம். கிளிஞ்சல் 1 சதம். தாதுப்புக் கலவை 2 சதம்.
23 வாரங்களுக்கு மேலான கோழிகள்
மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை ஆகிய தானிய வகைகள் 54 சதம். சோயா அல்லது கடலைப் புண்ணாக்கு 20 சதம். அரிசி அல்லது கோதுமைத் தவிடு 13 சதம். மீன்தூள் 5 சதம். டிசிபி 1 சதம். கால்சைட் 1 சதம். தாதுப்புக் கலவை 2 சதம்.
தீவன மூலப்பொருள்கள் பூசணத் தொற்று இன்றி, தரமாகவும் நன்கு காய்ந்தும் (நீர் சதவீதம் < 10%) இருக்க வேண்டும். தீவனத்தை அதிக நாட்கள் சேமித்து வைக்காமல், தேவைக்கேற்ப அவ்வப்போது தயாரித்து அளித்தால், கோழிகள் சிறந்த தீவன மாற்றுத் திறனுடன் விளங்கி அதிகளவில் இலாபத்தைக் கொடுக்கும்.
தீவனக் கலன்கள் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு (1:50) இருக்க வேண்டும். ஒரு நாளைக்குத் தேவையான தீவனத்தை ஒரே வேளையில் அளிக்காமல், 2-3 வேளையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். குஞ்சுப் பருவத்தில் 10-30 கிராம், வளர் பருவத்தில் உள்ள கோழிகளுக்கு 40-60 கிராம், முட்டைப்பருவக் கோழிகளுக்கு 90-110 கிராம் வீதம் அளிக்க வேண்டும்.
மேலும், பண்ணையாளர்கள் நாட்டுக் கோழிகளுக்கான தீவன மூலப்பொருள்கள் மற்றும் தீவனத்தை அவ்வப்போது தீவன ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்தால், அதிலுள்ள சத்துகளின் அளவைத் தெரிந்து கொள்வதோடு, பூசணத் தொற்றையும் கண்டறிந்து, அதனால் உண்டாகும் பேரிழப்பைத் தவிர்க்கலாம்.
மருத்துவர் வ.குமரவேல், முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி – 630 206.