செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர்.
கம்பு, சோளம், இராகி, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்றவையே நமது பாரம்பரிய உணவு தானியங்கள். மழைநீரையும் மண்ணிலுள்ள இயற்கையான சத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டு அதிகச் செலவில்லாமல் விளைந்து, உடல் நலம் காக்கும் உணவுப் பொருள்கள். இரசாயன உரங்களும், நச்சு மருந்துகளும் நிறைந்துள்ள இன்றைய அறிவியல் வேளாண்மையில், இன்னும் அவற்றின் தாக்கம் இல்லாமலே விளைவதால், இவை பக்கவிளைவில்லா உணவுப் பொருள்களாக உள்ளன. இந்தத் தானியங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி விளக்குகிறது இந்தக் கட்டுரை.
உணவே மருந்து என்பது நம் முன்னோர் கூற்று. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம். இதற்கு முக்கியக் காரணம், ஆயத்த உணவுகளை அதிகமாக உண்பது தான். இந்தப் பழக்கமே நோய்களுக்கு ஆதாரமாகிறது.
மாறிவரும் உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால், நம் நாட்டில் நீரிழிவு அதிகரித்து வருகிறது. இம்மாதிரியான குறைகளைச் சரி செய்வதுடன், சத்துக் குறையால் உண்டாகும் சிக்கல்களைக் களைவதில் சிறு தானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இங்கே பெண்களும் குழந்தைகளும் சத்துக் குறையால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சிறு தானியங்களின் பங்களிப்புப் பன்மடங்காகப் பெருகியுள்ளது.
ஐம்பதாண்டு சாகுபடிப் பரப்பை ஆராய்ந்த போது, தமிழகத்தில் சிறு தானிய சாகுபடிப் பரப்பளவு குறைந்து கொண்டே வருவது தெளிவாகியுள்ளது. தனிநபர் வாங்கும் திறன் அதிகரிப்பு, பெருகிவரும் நகரமயமாதல், அரிசி உணவு மீதான ஈடுபாடு ஆகியன, சிறு தானியங்கள் விளையும் பரப்பளவு குறைந்ததற்கான காரணங்களாகும்.
உடல் நலத்தில் சிறு தானியங்களின் பங்கு
உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, உடல் நலத்துக்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. பெருங்குடலின் செயலைச் சீராக்குகின்றன. உடல் சுறுசுறுப்புக்குக் காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறு தானியங்களில் அதிகளவில் உள்ள மக்னீசியம், தீவிர ஆஸ்துமாவையும் ஒற்றைத் தலைவலியையும் தடுக்கிறது.
இரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய நோய் வராமல் காக்கின்றன. சிறு தானியங்களில் இருக்கும் நயாசின் (வைட்டமின் B3) கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைக்கிறது. அன்றாடம் இவற்றைச் சாப்பிட்டு வந்தால், இரண்டாம் வகை, அதாவது, இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவதில்லை. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சத்துக் குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருப்பதற்கு உதவும். பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது. அதிகளவு நார்ச்சத்து மிகுந்த சிறு தானியங்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன.
கனத்த உடம்பின் எடை சீராகக் குறைகிறது. சிறு தானியங்களில் காணப்படும் பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் அமிலம் ஆகியன, நோய்கள் வராமல் தடுக்கும். இதைப் போலவே பைட்டேட், புற்றுநோய் ஏற்படாமல் காக்க உதவும். எலும்பு வளர்ச்சிக்கும் நம் இயல்பான நலத்துக்கும் சிறு தானியங்கள் பெரிதும் துணை புரிகின்றன.
சிறு தானியங்களில், இட்லி, தோசை, ரொட்டி, புட்டு, இடியாப்பம், அடை, உப்புமா, பாயாசம், இனிப்பு அடை, ஓமப்பொடி, முறுக்கு, பக்கோடா, வடை என, விதவிதமாகத் தயாரிக்கலாம். இவை அனைத்தையும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
மருத்துவக் குணங்கள்
சோளம்: இதில், உடலுக்குத் தேவையான புரதம், இரும்பு, கால்சியம் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் கனத்தைக் குறைக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், வாய் துர்நாற்றத்தைப் போக்கும். இதில் குறைந்தளவு கொழுப்புச்சத்து உள்ளது. மூல நோயாளிகள் சோள உணவைத் தவிர்த்து விட வேண்டும்.
கம்பு: இதிலுள்ள புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுகளும், பிற உயிர்ச் சத்துகளும் செரிமானத்தை அதிகரிக்கும். தேவைப்படாத கொழுப்பைக் கரைத்து உடல் கனத்தைக் குறைக்கும். தாய்மார்களிடம் பால் உற்பத்தியைப் பெருக்கும்.
இரவில் அதிகமாக விழிப்பவர்கள், அதிகநேரம் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் அதிக அழுத்தம் கொண்டவர்களின் உடல்கள் மிகவும் சூடாக இருக்கும். இவர்கள், கம்பைக் கஞ்சியாகக் காய்ச்சி, காலையில் அருந்தி வந்தால் உடற்சூடு குறையும். கண் பார்வைக்கும், முக்கியச் சத்தான வைட்டமின் உருவாகவும் தேவையான பீட்டா கரோட்டின் கம்பில் நிறைய உள்ளது.
எனவே, கண் நரம்புகளுக்குப் புத்துணர்வை அளித்துப் பார்வையைத் தெளிவாக்கும், இதயத்தை வலுவடையச் செய்யும். சிறுநீரைப் பெருக்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இளநரையைப் போக்கும்.
கேழ்வரகு: தானியங்களில் அதிகச் சத்துகளைக் கொண்டது கேழ்வரகு. இதில், புரதம், தாதுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் உயிர்ச் சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் வெப்பத்தைச் சமநிலையில் வைக்கும் கேழ்வரகு, குடலுக்கு வலிமையை அளிக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைச் சமன்படுத்த இது பெரிதும் பயன்படுகிறது.
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், முதியோர்க்கு எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் வலுவிழப்பு மற்றும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோ போராஸீஸ் போன்ற நோய்களின் தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள இரும்புச்சத்து இரத்தச் சோகையைத் தடுக்க மிகவும் பயன்படுகிறது. இதில், முக்கியமான அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன.
வரகு: இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துகள் அதிகமாக உள்ளன. இது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ச் சிக்கலைச் சரி செய்யும்.
சாமை: இது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் உயிரணு உற்பத்திக்கு உதவும் சாமை, ஆண்மைக் குறையைப் போக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
குதிரைவாலி: இது, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதில், நார், மாவு, கொழுப்பு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன. கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்தை அதிகமாகக் கொண்டது.
தினை: இது, அதிகளவில் சத்துகளைக் கொண்ட தானியமாகும். தினையில் உடலுக்கு வேண்டிய புரதமும் மற்ற சத்துகளும் உள்ளன. குறிப்பாக, வைட்டமின் பி நிறைய உள்ளது. தினை இதயத்தைப் பலப்படுத்தும். பசியைத் தூண்டும்.
பனிவரகு: இதில், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பி காம்ப்ளக்ஸ், கொழுப்பு, தயமின், நயசின், ரிபோபிளோவின், கோலின் போன்ற உயிர்ச் சத்துகள் மற்றும் பல தாதுப்புகள் நிறைந்துள்ளன. இது, நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். சருமத்தை மினுமினுக்க வைக்கும். நரை, மூப்பைத் தள்ளிப் போடும். எலும்புகளை வலுப்படுத்தும். இதயத்தைப் பாதுகாக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.
கல்லீரல் கற்களைக் கரைக்கும். கற்கள் உருவாகாமல் தடுக்கும். மரபணுக் குறைகளைப் போக்கும். நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டும். அறுவைச் சிகிச்சையால் ஏற்படும் புண்களை விரைவில் ஆற்றும். உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்ச் சிக்கலைப் போக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஏற்றது. மன உளைச்சலைக் குறைக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் மறதியைப் போக்கும்.
முனைவர் சு.சங்கீதா, முனைவர் கா.பரமேஸ்வரி, முனைவர் மா.ஜெயராமச்சந்திரன், முனைவர் ம.பாலுமகேந்திரன், வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம், விழுப்புரம் – 604 002.