மீன்களில் தயாராகும் உணவுப் பொருள்கள்!

மீன் HEADING PIC b7f8eb9ea607e7b31d0acfa1e7e3683a

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

மக்குத் தேவையான சத்துகள், தாவரங்கள், கால்நடைகள், பறவைகள், மீன் மற்றும் நுண்ணுயிர்கள் மூலம் கிடைக்கின்றன. இவற்றுள், மீன் உணவு ஏனைய உணவுகளைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது. மீன் உணவில், கடல் மற்றும் நன்னீர் உயிரினங்கள், குறிப்பாக, மீன்கள், ஆளி, மட்டி, கணவாய் போன்ற மெல்லுடலிகள், இறால் ஆகியன அடங்கும்.

இரகம், வளர்ச்சிக் காலம், இனப்பெருக்க நிலை, காலநிலை, பிடிக்கப்படும் இடம், தரம் போன்றவற்றைப் பொறுத்து, இவற்றிலுள்ள சத்துகள் மாறும். மீன் உணவில், புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து மற்றும் தாதுகள் நிறைய உள்ளன.

உணவில் மீனின் பங்கு

ஒரு மனிதனின் ஒவ்வொரு கிலோ எடைக்கும் அன்றாடம் ஒரு கிராம் வீதமும், வளரும் குழந்தைக்கு 1.4 கிராம் வீதமும் புரதம் தேவை. கர்ப்பிணிகளுக்கு 15 கிராம், பாலூட்டும் தாய்மார்களுக்கு 18-25 கிராம் புரதம் கூடுதலாகத் தேவை. இந்த முழுப் புரதத்தையும் மீன் உணவுகள் மூலமே பெற முடியும்.

மீனிலுள்ள சத்துகள்

மீன் தூள், மட்டித்தூள், மீன் கரைசல், மீன் நொதிக் கரைசல் போன்ற பல பொருள்கள், மீன் மற்றும் கோழியுணவுத் தயாரிப்பில் பயன்படுகின்றன. மீன் உணவானது, உடல் வளர்ச்சிக்கு, நலத்துக்கு ஆதாரமாய் இருப்பதாலும், எளிதில் செரிப்பதாலும், குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற முழு உணவாக விளங்குகிறது.

ஆயினும், நம் நாட்டின் பல பகுதிகளில், மீனை உண்ணும் பழக்கம் வரவில்லை. கடலோர மக்களின் முக்கிய உணவாக இருந்து வரும் மீன், நாட்டுக்குள் வாழும் மக்களிடம் பிரபலமாகவில்லை.

இந்த நிலையை மாற்ற, எளிதில் சாப்பிடும் வகையில் மீன்களைப் பதப்படுத்தி, சரியான முறைகளில் அடைத்து விற்க வேண்டும். அப்படிச் செய்தால், உலகச் சுகாதாரக் கழக நிர்ணயப்படி, ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 12 கிலோ மீன் உணவை உண்ணும் நிலையை நாம் எட்ட முடியும்.

மீன் ஊறுகாய்

தேவையான பொருள்கள்: மீன் 1 கிலோ, மஞ்சள் தூள் 10 கிராம், மிளகாய்த் தூள் 100 கிராம், சீரகம் 25 கிராம், பெருங்காயம் 10 கிராம், கடுகு 5 கிராம், வெந்தயம் 5 கிராம், கறிமசால் தூள் 10 கிராம், உப்பு 70 கிராம், பூண்டு 150 கிராம், இஞ்சி 150 கிராம், பச்சை மிளகாய் 80 கிராம், நல்லெண்ணெய் 300 மில்லி, வினிகர் 100 மில்லி, சிட்ரிக் அமிலம் 0.5 கிராம்.

செய்முறை: மீனிலுள்ள செதில்கள், குடல், செவிள் ஆகிய பகுதிகளை நீக்கி விட்டு, நன்கு கழுவ வேண்டும். பிறகு, சதைப் பகுதியைச் சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு, மஞ்சள் தூளைச் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் வைத்திருந்து, பொன்னிறம் வரும் வரை எண்ணெய்யில் பொரித்து எடுக்க வேண்டும்.

அடுத்து, இஞ்சி, பச்சை மிளகாய், தோல் நீக்கிய பூண்டை, அம்மியில் அல்லது மின்னம்மியில் நன்கு அரைக்க வேண்டும். கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தைத் தனித்தனியாக வறுத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, மீன்களைப் பொரித்த எண்ணெய்யைக் காய வைத்துக் கறிவேப்பிலையைப் போட்டுத் தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டுக் கலவையைச் சேர்த்து, இளம் சூட்டில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பிறகு, இதில் பொடித்த கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். மேலும், வினிகர், மிளகாய்த்தூள் மற்றும் உப்பைச் சேர்த்து 5 நிமிடம் வரை கிளற வேண்டும்.

பின்னர், பொரித்து வைத்துள்ள மீன்கள், சிட்ரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்து, 30 நிமிடம் வரை, நன்கு கிண்டி விட்டால் மீன் ஊறுகாய் தயார். இதை ஆற வைத்துச் சுத்தமான புட்டிகளில் வைத்துப் பயன்படுத்தலாம்.

கருவாட்டுப் பொடி

தேவையான பொருள்கள்: நெத்திலிக் கருவாடு 250 கிராம், கடலைப் பருப்பு 25 கிராம், நல்லெண்ணெய் 50 மில்லி, எலுமிச்சைச் சாறு 10 மில்லி, மிளகாய் வற்றல் 10, பூண்டு 1, கொத்தமல்லி 10 கிராம், தேங்காய்த் துருவல், உப்பு தேவையான அளவு.

செய்முறை: கருவாட்டைச் சிறிது நேரம் நீரில் ஊற வைத்து, தலை மற்றும் முட்களை நீக்கி நன்கு உலர வைக்க வேண்டும். வாணலியில் எண்ணைய்யை ஊற்றிச் சூடேற்றி, கருவாட்டைப் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு, பூண்டு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வதக்க வேண்டும். பிறகு, மின்னம்மியில் இட்டு அரைத்து, தேவையான அளவில் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து நன்கு கலக்கினால் கருவாட்டுப் பொடி தயார்.

மீன் வடகம்

மீன் வடகத்துக்கு எல்லா மீன்களையும் பயன்படுத்தலாம். ஆயினும், கொழுப்புக் குறைவான, ஓரளவு நெகிழ்வுச் சதையுள்ள கத்தளா, பன்னா, கிழங்கான், விளமீன் ஆகியன உகந்தவை. மீன் வடகத்தைச் சாதாரணக் கூழ்வடகம் போல் எளிதில் தயாரிக்கலாம்.

தேவையான பொருள்கள்: மீன் சதை 1 கிலோ, கிழங்கு மாவு 1 கிலோ, மக்காச்சோள மாவு 500 கிராம், உப்பு 50 கிராம், சீரகம் 20 கிராம், நீர் தேவைக்கேற்ப.

செய்முறை: மீன்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்தி நன்கு வேக வைக்க வேண்டும். பிறகு, முட்களை அகற்றிவிட்டு, சதைப் பகுதியைத் தனியே எடுத்து உரலிலிட்டு நன்றாக ஆட்ட வேண்டும்.

இத்துடன் கிழங்கு மாவு, மக்காச்சோள மாவு, உப்பு, சீரகம் ஆகியவற்றைக் கலந்து, தேவையான நீரையும் ஊற்றி, கூழ் போல் அரைக்க வேண்டும். பிறகு, எண்ணெய் தடவிய அலுமினியத் தட்டுகளில் தகட்டைப் போல ஊற்றி ஒரே அளவில் பரப்ப வேண்டும்.

இந்தத் தட்டுகளைக் கொதிக்கும் நீரில் அடுக்கி வைத்து, 2-3 நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும். இப்படி வேக வைத்த மீன் கலவையைக் கத்தி மூலம் வேண்டிய அளவில், வடிவத்தில் வெட்டி, தட்டுகளில் வைத்து அல்லது பிரித்து வைத்து வெய்யிலில் நன்றாகக் காய விட்டால் மீன் வடகம் தயார். இதை, நெகிழிப் பைகள் அல்லது தகரக் கலன்களில் காற்றுப் புகாமல் சேமித்தால், ஆறு மாதம் வரையில் பயன்படுத்தலாம்.

தொழில் முனைவோராதல்

சுய உதவிக் குழுவினரைத் தொழில் முனைவோராக மாற்ற, அரசும் பல்வேறு நிறுவனங்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. உணவுப் பொருள்கள் தயாரிப்புத் தொழிலைச் செய்வதற்கு, இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் நிறுவனத்திடம் சான்றிதழைப் பெறுவது நல்லது.

தொடக்கத்தில் நுகர்வோரை ஈர்க்க, தரமான பொருள்களைத் தயாரித்து, கவர்ச்சியான பொட்டலங்களில் அடைத்து, குறைந்த விலையில் அறிமுகப்படுத்த வேண்டும்.

முதலில் குறைந்த வருமானம் கிடைத்தாலும், நல்ல விற்பனையைத் தொட்ட பிறகு, நியாயமான சந்தை விலைக்கு விற்று, வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவருமே முதலாளிகள் என்பதால், உற்பத்தி, பொட்டலங்களில் அடைத்தல், விற்பனை ஆகிய அனைத்தையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால், தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.


முனைவர் ஜெ.செல்வி, சமுதாய அறிவியல் கல்லூரி, மதுரை, முனைவர் ப.காமராஜ், வேளாண்மைக் கல்லூரி, குடுமியான்மலை, முனைவர் மு.அழகர், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading