செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.
இலாபகரமான மீன் வளர்ப்புக்கு, பல்வேறு அறிவியல் உத்திகளைக் கையாள வேண்டும். அவற்றுள் முக்கியமானது, வளர்க்கப் போகும் மீன் இனங்களையும், அவற்றின் தரமான குஞ்சுகளையும் தேர்வு செய்வதாகும்.
வளர்ப்புக்கான இடம் நன்னீர் வசதியுடன் இருந்தால், சிறந்த நன்னீர் மீன்களையும், உவர் நீராக இருந்தால், அந்நீரின் தன்மைகளைத் தாங்கி வளரும் இனங்களையும், கடல் நீரெனில், கடல்வாழ் இனங்களையும் தேர்வு செய்ய வேண்டும். இருப்பினும், ஒரு சில இனங்கள் நன்னீரில் வாழ்ந்தாலும் உவர் நீரிலும் வளரும்.
அதைப்போல, உவர் நீரில் வாழும் இனங்களில் சில, நன்னீரிலும் வாழும். மேலும், கடல்வாழ் இனங்களில் சில, உவர் நீரிலும் வளரும். எனவே, வளர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் இனத்தின் தன்மையறிந்து மீன் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
வளர்ப்பு மீன்கள் வேகமாக வளரும் திறனுடன் இருக்க வேண்டும். அப்போது தான் அவற்றைக் குறுகிய காலத்தில் அறுவடை செய்து, மீன் வளர்ப்பை இலாபகரமாக்க முடியும். வளர்ப்பிடத்தில் உள்ள அங்ககப் பொருள்களை, மிதக்கும் தாவரம் மற்றும் விலங்கின நுண்ணுயிர்களை உண்டு, அதிக உடல் எடையை அடையும் தன்மையில் இருக்க வேண்டும். கலப்பின மீன்களாக இருந்தால், அவை, பிற இனங்களுடன் ஒத்துப் போகும் வகையிலும், அந்த இனங்களுடன் உணவுக்குப் போட்டியிடாத வகையிலும் இருக்க வேண்டும்.
வளர்ப்பிடத்தில் உள்ள மிதக்கும் தாவர மற்றும் விலங்கின நுண்ணுயிர்களை உண்டாலும், குளங்களில் அதிகமாக இருப்பு வைத்து வளர்க்கும் போது, அவை மேலுணவு விரும்பியாகவும் இருக்க வேண்டும். வளர்ப்புக் குளங்களில் ஏற்படும் தட்பவெப்பத் தன்மைகள் நீரிலுள்ள கார அமிலத் தன்மை, உயிர்வளி, ஒளி ஊடுருவும் தன்மை போன்றவற்றின் மாற்றங்களைத் தாங்கி வளர வேண்டும். இப்படி இருந்தால், பிழைப்புத் திறன் அதிகமாக இருக்கும்.
வளர்ப்பு மீன்கள், மீன் குஞ்சுப் பொரிப்பகங்களில் இனப்பெருக்கம் செய்பவையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவைக்கேற்ற தரமான மீன் குஞ்சுகளை வளர்ப்புக் குளங்களில் இருப்பு வைக்க இயலாது. வளர்க்கப்படும் மீனினங்கள் பல நிலைகளில் பிடிக்கப்பட்டு இடமாற்றம் அல்லது வளர்ச்சிக் கணிப்புச் செய்தல் போன்றவற்றுக்கு உட்படுத்தப்படும்.
எனவே, அவற்றைத் தாங்கும் திறனும் இருக்க வேண்டும். அத்துடன் சோதனைப் பிடிப்பு மற்றும் இறுதி அறுவடையின் போது எளிதில் பிடிபடும் வகையில் இருக்க வேண்டும். அதிகத் தசையும் சுவையும் மற்றும் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
மீன் குஞ்சுகளைத் தேர்வு செய்தல்
தரமான மீன் குஞ்சுகளைத் தேர்வு செய்து வளர்த்தால் தான் உற்பத்திச் சிறக்கும். மீன் வளர்ப்பு, முதன் முதலில் இயற்கைச் சூழலில் கிடைக்கும் குஞ்சுகளை நம்பியே இருந்தது. தற்போது பல மீனினங்களுக்கான குஞ்சுப் பொரிப்பகங்கள் இருந்தாலும், இன்னும் வளர்ப்புக்கான பல மீனினங்களின் குஞ்சுகள் இயற்கைச் சூழலிருந்தே பெறப்படுகின்றன. எதுவாக இருப்பினும், இருப்புச் செய்யுமுன், குஞ்சுகளின் தரத்தைக் கண்டறிந்து சிறந்த குஞ்சுகளை மட்டுமே இருப்புச் செய்ய வேண்டும்.
மீன் குஞ்சுகள் தேர்வின் போது கவனிக்க வேண்டியவை
குஞ்சுகள், சுகாதாரமான பொரிப்பகங்களில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். நோயற்ற நிலையில் வளர்ந்த தாய் மீன்களிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும். முதன் முறையாக அல்லது வயது முதிர்ந்த தாய் மீன்களிலிருந்து பெறப்படும் குஞ்சுகளின் வீரியம் குறைவாக இருப்பதால், அத்தகைய குஞ்சுகளைத் தவிர்க்க வேண்டும்.
குஞ்சுகள், அவற்றின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டும். அதாவது, சரியான நீளம் மற்றும் எடையில் இருக்க வேண்டும். இல்லையெனில், குஞ்சுகளின் வளர்ச்சி, வளர்ப்புக் குளங்களில் சிறப்பாக இருக்காது.
தரமான குஞ்சுகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய குஞ்சுகள் எப்போதும் உண்டு கொண்டே இருக்கும். நல்ல குஞ்சுகளின் கண்கள் இயற்கையான வடிவத்தில் இருக்கும். கண்களின் தோற்றத்தில் மாறுதல் இருந்தால் குஞ்சுகள் தரமற்றவையாகக் கருதப்படும். குஞ்சுகளின் உடல் சுத்தமாகவும், உடல் வடிவம் சீராகவும் இருக்க வேண்டும். உடலில் வேற்றுப் பொருள்கள் ஒட்டியோ, வடிவம் சீர் குலைந்தோ இருந்தால் நோயுற்றவையாக இருக்கும்.
குஞ்சுகளின் துடுப்புகள் முழுமையாக ஒளி ஊடுருவும் வகையிலும், நன்றாக விரியும் வகையிலும் இருக்க வேண்டும். குஞ்சுகளின் நிறம் அந்த இனக் குஞ்சுகளின் இயல்பான நிறத்தில் இருக்க வேண்டும். குஞ்சுகளின் மேல் ஒட்டுயிர்கள் மற்றும் கரு வரைகள் போன்றவை இருக்கக் கூடாது.
குஞ்சுகள் அனைத்தும் ஒரே சீரான வளர்ச்சியில் இருக்க வேண்டும். தரமான குஞ்சுகள் எப்போதும் சுறுசுறுப்புடன் நீந்திக் கொண்டிருக்கும். நீரோட்டத்தை ஏற்படுத்தினால், அதை எதிர்த்து நீந்தும். நலமற்ற குஞ்சுகள் நீரோட்டத்தை விட்டு விலகும் அல்லது நீரோட்டத்தின் போக்கிலேயே செல்லும்.
எனவே, மீன் வளர்ப்பை மேற்கொள்வோர், சிறந்த இனங்களைத் தேர்வு செய்து, தரமான பொரிப்பகம் அல்லது இயற்கைச் சூழ்நிலையில் வளரும் குஞ்சுகளைப் பெற்று வளர்த்தால், மீன் வளர்ப்பும் உற்பத்தியும் சிறக்கும்.
முனைவர் கி.சிவக்குமார், முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.