தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 24 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் வேளாண் நுண்ணுயிர் துறையின் உதவிப் பேராசிரியர், முனைவர் ஸ்ரீமதி பிரியா அவர்களின் ஆலோசனைப்படி, இந்த மாணவர்கள், அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, அசோபாஸ் ஆகிய உயிர் உரங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
உயிர் உரம் என்பது, உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்ட மண் ஊட்டப் பொருளாகும். இதை, மண், விதை மற்றும் தாவரங்களில் பயன்படுத்துவதன் மூலம், மண்ணின் வேர் உயிர்க்கோளம் அதிகரிக்கும்.
உயிர் உரங்கள், தழைச்சத்தாகிய நைட்ரஜனை வேர் முடிச்சில் பொருத்துதல், மணிச் சத்தாகிய பாஸ்பரசைக் கரைத்தல் ஆகிய இயற்கை முறைகள் மூலம், சத்துகளைச் சேர்க்கும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருள்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டும். மேலும், உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள், மண்ணில் உள்ள இயற்கைச் சத்துச் சுழற்சியை மீட்டு, மண் கரிமப் பொருள்களைக் கூட்டும்.
வறட்சி மற்றும் மண் மூலம் பரவும் சில நோய்களுக்கு எதிரான பாதுகாப்பைப் பயிர்களுக்கு வழங்கும். இரசாயன உரங்களைக் காட்டிலும் உயிர் உரங்கள் விலை குறைந்தவை. மேலும், இந்த உயிர் உரங்கள், முக்கியச் சத்துகள் தாவரங்களுக்குக் கிடைக்கும் தன்மையைக் கூட்டி, தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால், பயிர் விளைச்சல் 20-30 சதம் வரை கூடும்.
இத்தகைய சிறப்புகள் மிக்க நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் நொதிகளன் (Fermentor) மூலம் தயாரித்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த உயிர் உரங்களை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், குறைந்த விலையில் வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர்.
முனைவர் ல.ஸ்ரீமதி பிரியா, உதவிப் பேராசிரியர் – நுண்ணுயிரியல், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் – 625 604.