விவசாயிகளை வாழ வைக்கும் ஆடுகள்!

ஆடு

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.

ன்று பிரபலமாகி வரும் ஆடு வளர்ப்பு, படித்தவர், படிக்காதவர் என, எல்லாரையும் பணக்காரர்களாக ஆக்குகிறது. பசி இருக்கும் வரையில், விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் இருக்கும். ஆடு வளர்ப்பும் விற்பனையும் உள்ளூரில் நடப்பவை.

ஒரு நாட்டின் உணவுப் பட்டியலில், ஆட்டு இறைச்சிக்கு முக்கிய இடமுண்டு. இது, புரதம் நிறைந்தது. எனவே, விலை அதிகமாக இருந்தாலும், இதை உண்ணும் மக்களும் கூடிக்கொண்டே இருப்பார்கள். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஆடு வளர்ப்புத் தருவது இலாபம் தான்.

இதனால் கிடைக்கும் வருமானம் 2, 4, 8, 16 என, இரட்டைப் பண்பில் உயர்ந்து கொண்டே போகும். குறைந்த செலவில் எளிதாகப் பராமரிக்கலாம். நிறைய ஆட்கள் தேவையில்லை. யாரும் வளர்க்கலாம் என்பதால் எல்லாருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். ஊரகப் பொருளாதாரம் மேம்படும்.

ஆடுகள் வளர்ப்பிடம்

மேய்ச்சலுக்குச் சென்று வரும் ஆடுகளைக் கொட்டிலில் அடைக்க வேண்டும். மிகவும் சுத்தமாக, எளிதில் நோய்த் தொற்றுகள் பரவாத இடமாக, அமைதி, நீர், நல்ல காற்று, மரங்கள் நிறைந்து இருத்தல் வேண்டும். மேய்ச்சல் மற்றும் போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். கொட்டில் அல்லது பரண் வளர்ப்பு முறை சிறந்தது.

ஆட்டினங்கள்

ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல் ஆடு வளர்ப்பில் மிகவும் முக்கியம். பால், இறைச்சி, முடி உற்பத்திக்கான இனங்கள் பல உள்ளன. இவற்றில், நமது சூழலில் வளர்ந்து இலாபம் தரும் ஆடுகளை வளர்க்க வேண்டும். தமிழ்நாட்டில், கன்னியாடு, கொடியாடு, சேலம் கறுப்பாடு, பள்ளையாடு, மோளையாடு ஆகிய வெள்ளாட்டினங்கள் உள்ளன.

கன்னியாடுகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளன. உயரமாக, கறுப்பாக, முகம், காதுகளில் இரு வெள்ளைக் கோடுகளுடன் இருக்கும். மேலும், அடி வயிற்றில், கால்களின் உட்புறம் வெள்ளை நிறம் காணப்படும். இத்தகைய நிறம் கொண்ட ஆடுகள் பால் கன்னி ஆடுகள் எனப்படும்.

கொடியாடுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில், எட்டயபுரம், விளாத்திக்குளம் பகுதிகளில் உள்ளன. மிக உயரமாக, நீண்ட கழுத்து, உடலைக் கொண்டிருக்கும். வெள்ளையில் கறுப்பு மையைத் தெளித்ததைப் போன்றுள்ள ஆடுகள், கரும்போரை எனவும், வெள்ளையில் சிவப்பு மையைத் தெளித்ததைப் போன்ற ஆடுகள் செம்போரை எனவும் அழைக்கப்படும்.

சேலம் கறுப்பாடுகள்

சேலம் மாவட்டம் ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம். மேலும், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் உண்டு. உயரமாக, மெலிந்த உடலுடன் கறுப்பாக இருக்கும். இறைச்சி மற்றும் தோலுக்காக வளர்க்கப்படுகின்றன.

இந்திய வெள்ளாட்டு இனங்கள்

இந்தியாவில், 19 வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. இவற்றில், ஜமுனாபாரி ஆடுகள், உத்தரப் பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவை. தொங்கும் காதுகளுடன் உயரமாக இருக்கும்.

கிடா ஆடு 65-86 கிலோ இருக்கும். பெட்டை ஆடு 54-61 கிலோ இருக்கும். தினமும் 2.25-2.7 கி.கி. பாலைத் தரும். பாலுற்பத்தி 250 நாட்களில், 250-300 கி.கி. வரையில் 3.5 சத கொழுப்புச் சத்துடன் இருக்கும்.

பீட்டல் ஆடுகள் பஞ்சாபில் உள்ளன. ஜமுனாபாரியில் இருந்து உருவானவை. சிவப்பு நிறத்தில் வெள்ளைப் பொட்டுகளுடன் இருக்கும். கிடா 65-85 கிலோ எடையும், பெட்டையாடு 45-61 கிலோ எடையும் இருக்கும். கிடாக்கள் தாடியுடன் இருக்கும்.

சுர்தி ஆடுகள் பெராரியைப் போல குட்டைக் கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை. இவை, மும்பை, நாசிக், சூரத்தில் அதிகம். தினமும் 2.25 கிலோ பாலைத் தரும்.

மலபார் என்னும் தலைச்சேரி ஆடுகள், வெள்ளை, பழுப்பு, கறுப்பு நிறத்தில் இருக்கும். 2-3 குட்டிகளை ஈனும். கிடா ஆடு 40-50 கிலோ எடையும், பெட்டையாடு 30 கிலோ எடையும் இருக்கும். பாலைத் தரக்கூடிய இனம்.

ஒஸ்மனா பாடி ஆடுகளை ஒஸ்மனாபாத் என்றும் அழைப்பர். கறுப்பு, கறுப்பு வெள்ளை கலந்த அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். தினமும் 0.9-2.8 கிலோ பாலைத் தரும்.

அயல்நாட்டு இனங்கள்

டோகன் ஸ்பெர்க், சேனன், போயர், டமகேஸ், ஆலபைன், நுபியன், அங்கோரா போன்றவை.

தடுப்பூசிகள்

பிபிஆர் நோய்க்கான முதல் தடுப்பூசியை 3-4 மாதத்திலும், தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறையும் போட வேண்டும். கோமாரிக்கான முதல் தடுப்பூசியை 2 ஆம் மாதமும், தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறையும் போட வேண்டும். துள்ளுமாரி நோய்க்கான முதல் தடுப்பூசியை 6 வாரத்திலும், தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறையும் போட வேண்டும்.

ஆட்டம்மை முதல் தடுப்பூசியை 3-6 மாதத்தில், நோய் காணப்படும் பகுதியில் மட்டும் போட வேண்டும். டெட்டனஸ் ஜன்னி தடுப்பூசியை, குட்டி ஈன 6-8 வாரங்கள் உள்ளபோது வாரத்துக்கு ஒருமுறை போட வேண்டும்.

தொண்டை அடைப்பான் நோய்க்கான முதல் தடுப்பூசியை, நோய் காணப்படும் பகுதியில் மட்டும் முதலில் 6 மாதத்திலும், அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறையும் போட வேண்டும்.

குடற்புழு நீக்கம்

ஆறுமாதம் வரையில், மாதம் ஒருமுறை குட்டிகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, மூன்று மாதத்துக்கு ஒருமுறை, அதாவது, பருவமழை தொடங்கும் முன்னும், மழையின் போதும், மழைக்குப் பின்னும் கொடுக்க வேண்டும்.


ஆடு Dr.Arivarasan.S rotated e1712819491534

முனைவர் செ.அறிவரசன், நா.முத்துக்கிருஷ்ணன், ஜே.எஸ்.ஏ. வேளாண்மைக் கல்லூரி, மா.பொடையூர், கடலூர் – 606 106.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading