செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.
கொங்கு என்றாலே, கோடை வெய்யிலுக்கு நுங்கைச் சாப்பிட்டதைப் போன்ற இதமான உணர்வு வரும். உறவுக்கும் நட்புக்கும் கை கொடுக்கும் மக்கள் வாழும் பகுதி; உழவையும் தொழிலையும் போற்றும் உழைப்பாளர்கள் வாழும் பகுதி.
தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கொங்கு மண்டலத்தில், ஆற்று நீரால் வளம் கொழிக்கும் பகுதிகளும் உண்டு; ஆயிரம் அடிக்குக் கீழே நிலத்தடி நீர் சென்று விட்ட வறட்சிப் பகுதிகளும் உண்டு. ஆனாலும், மமதையோ, மன வறட்சியோ கொள்ளாமல், எல்லோரையும் சமமாக நேசிப்பவர்கள் கொங்கு மக்கள்.
காடு என்று கருதாமல், தோட்டம் தோறும் வீடு கட்டிக் குடியிருக்கும் இந்த மக்களின் வாழ்க்கை முறை, பழமைக்கும் இயற்கை வாழ்க்கைக்கும் அடையாளம். ஆடுகள் இருக்கும்; மாடுகள் இருக்கும்; கோழிகள் இருக்கும்; காவலுக்கு நாய்கள் இருக்கும்; அவற்றுடன் இவர்களும் இருப்பார்கள்; நல்ல காற்றையும் தூய சூழலையும் பெற்று நெடுநாள் வாழ்வார்கள்.
இந்தச் சூழலில் அமைந்தது தான் காட்டுவலசு. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடிப் பகுதியில் உள்ள சிற்றூர்.
இது தான் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பிறந்த ஊர். பொறுப்பு மிகுந்த அமைச்சர் பதவி, தோரணை மிக்க அரசியல் வாழ்க்கை என்னும் மேம்பட்ட சூழலில் இருக்கும் அவரிடம், “நீங்கள் நீர் இறைத்து, வயல் உழுது, பயிர் விளைவித்த அந்தக்கால விவசாய வாழ்க்கையைச் சொல்லுங்கள்’’ எனக் கேட்டதும் குதூகலமானார்.
“ஒருநாள் எங்கள் ஊருக்கு வாருங்கள், தோட்டத்தில் அமர்ந்து நிறையப் பேசலாம்’’ என ஆர்வம் கொப்பளிக்கச் சொன்னார். அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றோம்.
காலையிலேயே கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என, சுமார் 300 பேர்கள் கூடியிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் கனிவுடன் பேசி, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்த அமைச்சர், உடனடியாக அவற்றைப் பரிசீலித்து, தேவையான உதவிகளைச் செய்யும்படி, அதிகாரிகளிடம் செல்பேசியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
நம்மைக் கண்டதும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்ற அவர், “இப்படித் தான் தம்பி, ஊருக்கு வந்தால் உட்காரக் கூட நேரமிருக்காது. என் தொகுதி மக்களும், சுற்றியுள்ள தொகுதிகளைச் சேர்ந்த மக்களும், நான் ஊருக்கு வரும் போது, கோரிக்கை மனுக்களுடன் வந்து விடுவார்கள்.
நானும் அவர்கள் அனைவரையும் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான உதவிகளை என்னால் முடிந்தவரை செய்து கொடுத்து வருகிறேன். நம்மை நம்பி வாக்களித்தவர்கள். என்றைக்கும் நம் கூடவே இருப்பவர்கள். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதைத் தலையாய கடமையாகக் கொண்டிருக்கிறேன்.
மனுக்களை வாங்கியதும், என்ன விஷயம் என்பதைப் படித்து விடுவேன். சட்டத்திற்கு உட்பட்டு செய்ய முடிந்த காரியங்கள் அனைத்தையும், அடுத்தடுத்துச் செய்து கொடுத்து விடுவேன். இயலாத காரியங்களை, இயலாது எனத் தெளிவாகச் சொல்லி விடுவேன். இது என் அணுகுமுறை’’ என்றவர், அருகிலிருந்த நாற்காலியில் நம்மை அமரச் சொல்லிவிட்டு, தொடர்ந்து மனுக்களைப் பெற்றார்.
இப்படி, அமைச்சரின் மக்கள் சந்திப்புப் பணி முடிய, காலை 11 மணி ஆகி விட்டது. அதன்பின், கவுந்தப்பாடிக்கு அருகில் காட்டுவலசு கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்துக்குக் கிளம்பினோம். காரில் செல்லும் போதே, தன்னுடைய இளமைக் காலம் குறித்து, அமைச்சர், நம்மிடம் சொல்லிக் கொண்டே வந்தார்.
“எங்களின் பரம்பரைத் தொழில் விவசாயம் தான். தாத்தா, பாட்டி காலத்தில் இருந்தே இதைத் தான் செய்து வருகிறோம். அந்தக் காலத்தில் இருந்ததைப் போலவே, இப்போதும் நானும் என் தம்பியும் ஒரே குடும்பமாக, அதாவது, கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம்.
எங்களுக்குச் சுமார் 125 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், நெல், கரும்பு, வாழை, மஞ்சள், தென்னை, நெல்லி, கொய்யா, மாதுளை, மா, பலா, எலுமிச்சை என, பலதரப்பட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம்.
விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு வேலையும் எனக்கு நன்றாகத் தெரியும். மாடுகளைப் பூட்டி உழுவேன், மண்வெட்டி எடுத்துப் பாத்தி கட்டுவேன், கமலை பூட்டி நீர் இறைப்பேன், வண்டியோட்டி ஏரி வண்டலை எடுத்து வந்து நிலத்தில் உரமாகக் கொட்டுவேன், களையெடுப்பேன், நீர் பாய்ச்சுவேன், கதிர் அறுப்பேன்.
எவ்வளவு வேலையென்றாலும் மலைக்காமல் செய்வேன். அது, வெய்யிலுக்கும் மழைக்கும் இருட்டுக்கும் அஞ்சாத காலம். இன்னும் சொல்லப் போனால், அது சுகமான காலம். நான் அரசியலுக்கு வரவில்லை என்றால், இன்றும் நிலத்தில் இறங்கி, விவசாய வேலைகளைத் தான் மகிழ்ச்சியாகச் செய்து கொண்டிருப்பேன்.
ஒரு கட்டத்தில், விவசாயத்தோடு, அரசியலிலும் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினேன். அரசியலில், என்னுடைய அயராத உழைப்பை, தீவிரத்தை அறிந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள், 2001 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். மக்களின் நல்லாதரவால் வெற்றி பெற்றேன்.
அதன் பிறகு, மக்களோடு நேரடியாக இருந்து செயலாற்ற வேண்டிய கடமைகள் அதிகமாகி விட்டதால், விவசாய வேலைகளை நேரடியாகச் செய்வதற்கு நேரம் இல்லாமல் போய் விட்டது. இருந்தாலும், அவ்வப்போது, தோட்டத்துக்கு வந்து வேலைகள் நடப்பதைப் பார்க்கிறேன். அந்தளவில் தான் இப்போது என்னால் முடிகிறது.
இருந்தாலும், விவசாயத்தின் மீதான நேசிப்பு எனக்குத் துளியும் குறையவில்லை. விவசாயமே என் உயிர் மூச்சு. தற்போது விவசாயம் முழுவதையும் என் தம்பி கவனித்துக் கொள்கிறார்’’ என்று சொல்லும் போது, கார் தோட்டத்தை அடைந்திருந்தது.
காரில் இருந்து இறங்கி தோட்டத்துக்குள் சென்றோம். ஆளுக்கு மேல் வளர்ந்திருந்த வாழை மரங்கள் நம்மை வரவேற்றன. அந்த வாழைத் தோப்பில் நடந்தபடி மீண்டும் பேசத் தொடங்கினார். அவரின் பல்வேறு சாயல்களை நம்முடைய கேமராவில் பதிந்து கொண்டே, அவரைப் பின் தொடர்ந்தோம்.
“சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கமலை அமைத்து, மாடுகளைப் பூட்டி, கிணற்றில் இருந்து நீரை இறைத்தோம். அதன் பின்னர் நீரை இறைக்க ஆயில் மோட்டார் வந்தது, மின்சார மோட்டார் வந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தப் பகுதியில் நீர் வசதி நன்றாக இருந்தது. அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி விட்டது.
கடந்த ஆறேழு ஆண்டுகளாகத் தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாகி விட்டது. அதனால், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, விவசாயம் செய்து வருகிறோம். 1,000 முதல் 1,200 அடி வரையுள்ள 25-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளோம். ஆனாலும், போதுமான நீர் கிடைக்கவில்லை. எனவே, தற்போது சாகுபடி முழுவதையும், சொட்டுநீர்ப் பாசன முறைக்கு மாற்றி விட்டோம்.
எங்கள் பகுதியில் தான், பவானிசாகர் அணை இருக்கிறது. அணை நிரம்பி விட்டால் பாசன நீர் கிடைப்பதில் சிக்கல் இருக்காது. கடந்த சில ஆண்டுகளாகப் போதுமான மழை இல்லாததால், அணை முழுமையாக நிரம்பவில்லை.
ஆனால், இந்தாண்டில் அணை நிரம்பியுள்ளது. இது, விவசாயத்துக்கு மிகப் பெரிய துணையாக இருக்கும்’’ என்று பேசிக்கொண்டே, தாளவாடியில் உள்ள தென்னந் தோப்புக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த தோட்டக்காரர்கள் வெய்யிலுக்கு இதமாக இளநீரை வெட்டித் தந்தனர். அதை அருந்தியபடியே நம்மிடம் பேசினார். “இந்தத் தோப்பின் பரப்பளவு 40 ஏக்கர். சுமார் 2,500 தென்னை மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் எல்லாம் 1997 ஆம் ஆண்டு என்னால் நடப்பட்டவை’’ என்று சொன்ன போது, சிறந்த படைப்பாளியின் மனதில் எழும் அந்தப் பெருமிதத்தை நம்மால் உணர முடிந்தது.
அணில் தாண்டா தென்னை மரங்கள் ஆயிரம் வைத்திருப்பவனை அரசனுக்குச் சமம் என்கிறது பழமொழி. அப்படியானால், இவரின் சிறப்பை எப்படி மதிப்பிடுவது என்பதற்கு முன், இதை அடைவதற்குப் பின்னால் எவ்வளவு கடினமான உழைப்பு இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, வியப்பும், அவர் மீதான மதிப்பும், எல்லையற்ற பெருவெளியில் உயர்ந்து கொண்டே போயின.
தோப்புக்குள் ஆடுகள், பசு மாடுகள், காளை மாடுகள் நிறைய இருந்தன. அவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டே, “எங்களிடம் ஐம்பது மாடுகள், இருநூறு ஆடுகள் உள்ளன. கோழிகளையும் நிறைய வளர்த்து வருகிறோம்.
1970 என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் காளை மாடுகளைக் கலப்பையில் பூட்டி உழுது தான் விவசாயம் செய்தோம். இப்போது உழுவதற்கு, நடுவதற்கு, களையெடுப்பதற்கு, அறுவடை செய்வதற்கு என்று, விவசாயமே இயந்திரமயமாகி விட்டது.
விவசாயம் மிகவும் மகிழ்ச்சியான, மன நிறைவான தொழில். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, இப்படி மகிழ்ச்சியான தொழிலாக இருந்த விவசாயம், மழையில்லாமல் போனதால் வறட்சி ஏற்பட்டு, பயம் கலந்த தொழிலாக மாறி விட்டது.
எனக்கு இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் எங்கள் நிலத்தில் முடிந்த வரையில் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்த்து, சாணம் முதலிய இயற்கை உரங்களையே பயன்படுத்தி வருகிறோம்.
மாடுகள், ஆடுகள் நிறைய இருப்பதால், போதுமான அளவில் இயற்கை உரம் கிடைக்கிறது. அதனால், பஞ்ச கவ்யா, அமுதக் கரைசல் போன்றவற்றை தயாரித்துக் கொள்கிறோம். இந்த மாடுகள் மூலம் சுத்தமான பால் கிடைக்கிறது. கோழிகள் மூலம் முட்டை கிடைக்கிறது. வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் தோட்டத்திலேயே விளைவித்துக் கொள்கிறோம்.
எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருப்பதால், என் மனைவி வழி உறவுக்காரர்கள், என் தம்பியின் மனைவி வழி உறவுக்காரர்கள், எங்கள் குடும்ப உறவினர்கள் என அடிக்கடி வந்து கொண்டே இருப்பார்கள். அதனால் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், எங்கள் வீட்டில் உறவினர்கள் வரவர, மாதம் முப்பது நாளும் விருந்து நடந்து கொண்டே இருக்கும். இவ்வகையில், பழமையை மறக்காமல், மாற்றாமல் இருக்கும் வீடாக எங்கள் வீடு அமைந்திருப்பதில் பெருமைப்படுகிறேன், இதை இறைவன் கொடுத்த வரமாக நினைக்கிறேன்’’ என்றார்.
பிசுங்கக்கூட நேரமில்லை என்று ஊர்களில் சொல்வார்கள். அதைப்போல, ஓய்வில்லாத பணிகளுக்கு இடையில், விவசாயத்தோடு வாழ்கிறேன் என்பதை நம் கண்முன் காட்டிய, ஓய்வில்லா அமைச்சரின் அரசியல் வாழ்க்கை உச்சத்தைத் தொடவும்; அவருடைய விவசாய வாழ்க்கை தொய்வின்றித் தொடரவும் வாழ்த்துகளைச் சொல்லி விடை பெற்றோம்.
மு.உமாபதி