நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை, டிரோன் மூலம் தெளிக்கலாம் என்றும், இதற்கு அரசு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
பரமத்தி வட்டாரத்தில் இப்போது பருத்தி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருத்திக் காய்கள் காய்த்து அறுவைடைக்குத் தயாராகும் நிலையில், மாவுப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான பூச்சி மருந்துகளைத் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஆள் பற்றாக்குறை, கூடுதலான கூலி போன்ற காரணங்களால் பூச்சி மருந்துகள் தெளிப்புக்கான செலவு அதிகமாகிறது. இதிலிருந்து விவசாயிகளை மீட்கும் நடவடிக்கையை, தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எடுத்துள்ளது.
அதாவது, டிரோன் மூலம் பூச்சி மருந்துகளைத் தெளிக்கலாம். இதற்கு, ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் அல்லது 50% மானியம், இவற்றில் எது குறைவோ அதை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீடித்த நிலையான பருத்தி இயக்கத் திட்டத்தின் மூலம் வழங்க உள்ளது. இதனால், தேவையற்ற கூடுதல் செலவு, நேர விரயம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். குறிப்பாக, பூச்சி மருந்து செலவும் குறைகிறது.
எனவே, பரமத்தி வட்டாரப் பருத்தி சாகுபடி விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திப் பயன் பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு, அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுங்கள் என்று கூறியுள்ளார்.
பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.