ஒரு கிலோ செம்பருத்திப்பூ முந்நூறு ரூவா!

செம்பருத்தி HEADING PIC e18190c8a527cceab37b874803f12670

செம்பருத்திச் செடிகளை தனிப்பயிரா இல்லாம, வேலிப்பயிராக் கூட சாகுபடி செய்யலாம். இதனால, விவசாயிகள் நட்டப்படுறதுக்கு வாய்ப்பே இல்ல. இது ஒரு பல்லாண்டுப் பயிர்.

செய்தி வெளியான் இதழ்: 2018 அக்டோபர்.

கொஞ்சம் சிந்தித்துச் செயல்பட்டால் விவசாயிகள் வறுமையில் வாட வேண்டிய அவசியமில்லை. நீரில்லை என்பதால் பயிர் செய்ய இயலவில்லை எனக் காரணம் சொல்லத் தேவையில்லை.

பெய்யும் மழைநீரைக் கொண்டு, இருக்கும் நீரைச் சிக்கனப்படுத்தி நல்ல வருமானத்தைப் பார்க்க முடியும். ஏனெனில், தானியப் பயிரை சாகுபடி செய்தால் தான் வருமானம் என்றில்லாமல், நிலத்தில் முளைக்கும் ஒவ்வொரு தாவரமும் வருமானம் தரும் காரணியாக உள்ளது.

களைகளைக் கூட மட்க வைத்து மண்புழு உரமாக மாற்றி விற்று விடலாம். மூலிகைச் செடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, பெரியளவில் நீர்த் தேவை இல்லாத செம்பருத்தியைச் சாகுபடி செய்தால் இருபது ஆண்டுகள் வரையில் பயனளிக்கும் என்பது அனுபவ விவசாயிகளின் கருத்து.

பயிர்ப் பாதுகாப்புச் செலவு என்பதும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. மழைக் காலத்தில் நட்டு விட்டால், குறைந்தது மூன்று மாதங்களுக்கு அந்த நீரிலேயே செடிகள் நன்கு வளர்ந்து விடும். குறைந்த நீரிலும் செம்பருத்தி வருமானம் தரும். செம்பருத்திப் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, செம்பருத்திச் செடிகளை சாகுபடி செய்திருக்கிறார், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், தூத்துக்குடி ஆசிரியர் ஆலம்நாட். இவரிடம் செம்பருத்தி சாகுபடி அனுபவத்தைக் கூறுங்கள் எனக் கேட்டபோது,

“எனக்கு ஒன்னரை ஏக்கர் நெலமிருக்கு. ஆத்துல தண்ணி வந்தா, எல்லாரையும் போல நெல்லைப் பயிரிடுவேன். இப்பிடி இருக்கும் போது செம்பருத்திப் பூக்களுக்கு நல்ல கிராக்கி இருக்குன்னும், செம்பருத்திச் செடிகளை வளர்த்தா, நல்ல வருமானம் வரும்ன்னும் கேள்விப்பட்டேன்.

ஆனாலும், இதுல அனுபவம் உள்ள விவசாயிகளைச் சந்திச்சுப் பேசித்தான் ஒரு முடிவுக்கு வரணும்ன்னு நெனச்சேன். அதனால, செம்பருத்தி விவசாயம் எங்க நடக்குதுன்னு விசாரிச்சேன்.

அப்போ, திருச்செந்தூர் பக்கத்துல காயல்மொழிங்கிற ஊருல முகம்மது இப்ராஹிம், செம்பருத்திச் செடிகளை சாகுபடி செஞ்சிருக்கிறதா சொன்னாங்க. உடனே, நானு அந்த ஊருக்கே போயி அவருகிட்ட இதைப் பத்தி வெவரம் கேட்டேன்.

அதுக்கு அவரு, தாராளமா செம்பருத்திச் செடிகளை வளர்க்கலாம், உங்களுக்கு எந்தக் குறையும் வராதுன்னு நம்பிக்கை குடுத்தாரு. அதுமட்டுமில்லாம, செம்பருத்திப் பூக்களை அவரே விலைக்கு எடுத்துக்கிறதாவும் சொன்னாரு.

இதுக்கடுத்து, செம்பருத்திச் செடிகள் எங்க கிடைக்கும்ன்னு விசாரிச்சேன். அப்போ, நெய்வேலிக்குப் பக்கத்துல கீழ்வேலிங்கிற ஊருல இருக்குன்னு சொன்னாங்க. உடனே அங்க போயி, ஒரு செடி மூனு ரூவான்னு 200 செடிகளை வாங்கிட்டு வந்தேன்.

அஞ்சடி இடைவெளியில ரெண்டுக்கு ரெண்டடி குழிகளை எடுத்து, நல்லா ஆறப் போட்டேன். அடுத்து, அந்தக் குழிகள்ல மட்குன தொழுவுரத்தைப் போட்டுச் செடிகளை நட்டேன். ஆனாலும், செம்பருத்திச் சாகுபடியைப் பத்தி இன்னும் நல்லா விசாரிக்கணும், வெவரங்களைத் தெரிஞ்சுக்கணும்ன்னு, திருநெல்வேலியில செம்பருத்தியை சாகுபடி செய்யிற அகஸ்டின் கிருபாகரனைச் சந்திச்சேன். நல்ல நம்பிக்கை குடுத்த அவரும், செம்பருத்திப் பூக்களை நானே வாங்கிக்கிறேன்னு உறுதி குடுத்தாரு.

காய வச்ச ஒரு கிலோ செம்பருத்திப் பூக்கள, கிலோ 300 ரூவான்னு எடுத்துக்கிறதா சொன்னாரு. இருநூறு செடிகள் தான் இருக்குன்னு சொன்னதுக்கு, இந்தச் செடிகளை நல்லா வளர்த்து, ஒரு செடியில அன்றாடம் முப்பது பூக்கள் வந்தாலே நல்ல இலாபம் கிடைக்கும்ன்னு சொன்னாரு. அவரைச் சந்திச்சுப் பேசுனதுல எனக்கு இன்னும் கூடுதலா நம்பிக்கை வந்துச்சு.

இப்போ மூனு மாதச் செடிகளா இருக்கு. இதுல பெரியளவுல பயிர்ப் பாதுகாப்புன்னு சொல்றதுக்கில்ல. ஆடு மாடுக கடிக்காது. செடிக வளர வளர வறட்சியை நல்லா தாங்கும். இருபது ஆண்டுகள் வரைக்கும் நல்லா பூக்கும். இதுல இருக்குற ஒரே சிக்கல், செம்பருத்திச் செடிகளை மாவுப்பூச்சிகள் தாக்கும். இதுக தாக்குற எடத்துல செடிகள் முண்டு மாதிரி ஆகிப் போகும். இதை மட்டும் வர விடாம கட்டுக்குள்ள வைக்கணும்.

இந்த மாவுப் பூச்சிகள் இரசாயன மருந்துக்குக் கட்டுப்படுறது இல்ல. ஆனா நாம இயற்கையா தயாரிக்கிற இஞ்சி பூண்டுக் கரைசலைத் தெளிச்சா, இருக்குற எடமே தெரியாம அழிஞ்சு போகும். இந்தக் கரைசலை நாமளே தயாரிக்கலாம்.

அதாவது, ஒரு அரை கிலோ அளவுக்கு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சமமா எடுத்து நல்லா பசை மாதிரி அரைக்கணும். இதோட மூனு லிட்டர் கோமியத்தைக் கலந்து 21 நாளைக்கு ஊற வச்சா, இஞ்சி, பூண்டுக் கரைசல் தயாராகிரும். நெறையா வேணும்ன்னா, இதே கணக்குல இந்தப் பொருள்களோட அளவைக் கூட்டிக்கிற வேண்டியது தான்.

பத்து லிட்டர் தண்ணிக்கு 100 மில்லிங்கிற கணக்குல இந்தக் கரைசல எடுத்துக்கிறணும். இதுல, 10 மில்லி வேப்ப எண்ணெய், காதி சோப்பைக் கலந்து தெளிச்சா, மாவுப்பூச்சிக காணாம போயிரும்.

கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கணும். அடுத்து, பதினஞ்சு நாளைக்கு ஒருமுறை பஞ்சகவ்யா, ஜீவாமிர்தத்த வேர் வழியா குடுக்கணும். மீன் அமிலத்த, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கணும்.

செம்பருத்திச் செடிகளைப் பணத்துக்காக வளர்க்குறதுனால இந்த உத்திகளைப் பயன்படுத்திக்கிட்டே வந்தா, பூக்கள் நெறையளவுல கெடைச்சுக்கிட்டே இருக்கும்.

பஞ்சகவ்யா கரைசல தயாரிக்க, ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் பஞ்சகவ்யாவ சேர்க்கணும். மீன் அமிலக் கரைசல தயாரிக்க, ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வீதம் மீன் அமிலத்த சேர்க்கணும்.

ஜீவாமிர்தக் கரைசல தயாரிக்க, பத்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தத்த சேர்க்கணும். ஜீவாமிர்தத்த பாசன நீரிலும் கலந்து விடலாம். இப்படிச் செய்யும் போது, ஒரு ஏக்கருக்கு 60-100 லிட்டர் ஜீவாமிர்தம் தேவைப்படும்.

தனிப்பயிரா இல்லாம, வேலிப்பயிராக் கூடச் செம்பருத்திச் செடிகளை சாகுபடி செய்யலாம். இதனால, விவசாயிகள் நட்டப்படுறதுக்கு வாய்ப்பே இல்ல. இது ஒரு பல்லாண்டுப் பயிர். அதனால, உழுதேன், பாத்தி கட்டுனேன், நடவு நட்டேன்ன்னு, அடிக்கடி எந்த உழவடைச் செலவும் இல்லாம, தொடர்ந்து வருமானத்தை எடுத்துக்கிட்டே இருக்கலாம்.

இன்னிக்கு, மூலிகை சார்ந்த பொருள்கள் மற்றும் மருவத்துவத்தை நோக்கி மக்கள் பார்வை திரும்பியிருக்கு. அதனால, வருங்காலத்துல இந்தப் பூக்களோட தேவை கூடிக்கிட்டே இருக்கும்; சந்தை வாய்ப்பும் நல்லா இருக்கும்’’ என்றார்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading