My page - topic 1, topic 2, topic 3

சவுக்கு மரம்!

சவுக்கு மரம்

வுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசுரினா ஈக்குஸ்டிபோலியா கேசுரினா ஜுங்குனியானா. கேசுவரனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. விரைவாக வளரும் இம்மரம், பசுமை மாறா ஊசியிலைகளைக் கொண்டது.

இம்மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரையுள்ள மற்றும் 15-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 1,100 மி.மீ. மழையுள்ள இடங்களில் வளரும்.

கடற்கரை மணல் சார்ந்த நிலமுள்ள ஆந்திரம், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வளர்கிறது.

அழகுக்காக, எரிபொருளுக்காக மற்றும் பிற தேவைகளுக்காக, இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, புளோரிடா ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வரப்பட்டது.

பயன்கள்

காகித ஆலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. சிறிய தளவாடப் பொருள்கள் மற்றும் விவசாயக் கருவிகளைத் தயாரிக்க உதவுகிறது. கூரை வீடுகளை அமைக்க, சாரம் கட்ட உதவுகிறது. விறகாகவும், கரி தயாரிக்கவும் பயன்படுகிறது. தோட்டத்தைச் சுற்றிக் காற்றுத் தடுப்பானாக வளர்க்கலாம். சந்தனம் மரம் வளர்வதற்கு ஏற்ற வேர் ஒட்டுண்ணியாகத் திகழ்கிறது.

காகித ஆலையின் உதவிகள்

தரமான ஒட்டுச் செடிகளை உருவாக்கி, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்குதல். தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குதல். வங்கிக் கடன் தேவைப்படும் விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்தல். வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நேரடித் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.

மண்வாகு

சவுக்கில் கேசுரினா ஈகோசெட்டிஃபோரியா, கேசுரினா ஜுங்குனியானா என இரு வகைகள் உள்ளன. இம்மரம், மணல், வண்டல் மண், செம்மண்ணில் நன்கு வளரும். மண்ணின் அமில காரத்தன்மை 6-8 இருக்க வேண்டும்.

கடின மண், களிமண் மற்றும் வடிகால் வசதியில்லாத மண்ணில், மரத்தின் வளர்ச்சிக் குறைவாக இருக்கும். அதிக மண்ணரிப்பு மற்றும் நீர்த்தேக்க நிலங்களைத் தவிர்க்க வேண்டும்.

நாற்றங்கால்

நன்கு வளர்ந்துள்ள 5-6 வயதான சவுக்கு மரங்களில் இருந்து ஜுன்- டிசம்பர் காலத்தில் விதைகளைச் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் 7.5-10 இலட்சம் விதைகள் இருக்கும். இதன் தூய்மைத் தன்மை 80-90 சதமாகும். ஈரப்பதம் 7.3 சதமாகும். இவற்றைக் கொண்டு நாற்றங்கால் அமைக்க வேண்டும்.

இணையாக வளரும் தண்டுகள் மூலமும் சவுக்கை இனப்பெருக்கம் செய்யலாம். இந்தத் தண்டுகளை இன்டோல் ப்யூட்ரிக் அமிலத்தை அடிப்படையாகக் கொண்ட வேர் வளர்ச்சி ஹார்மோனில் (3000-6000 பிபிஎம்) நனைத்தெடுத்து, 70-80 சதம் ஈரப்பதம் உள்ள பசுமைக்குடிலில் வைக்க வேண்டும். இவை, 20-25 நாட்களில் புதிய வேர்களை விட்டு, தரமான நாற்றுகளாகக் கிடைக்கும்.

நடவு

நன்கு பண்படுத்திய நிலத்தில் விதை மூலம் உற்பத்தி செய்த கன்றுகளை 4×4 அடி இடைவெளியிலும், வீரிய ஒட்டுக் கன்றுகளை 5×5 அடி இடைவெளியிலும் நட வேண்டும். நடவுக்குழி ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் எடுக்க வேண்டும்.

நடவுக்கு முன், குழி மண்ணுடன் மட்கிய தொழுவுரம், டி.ஏ.பி அல்லது கலப்புரம் 30 கிராம், கரையானைத் தடுக்க, போரேட், திம்மட் குருணை 5 கிராம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும்.

பிறகு, நாற்றுகள் இருக்கும் நெகிழிப் பைகளை, மெல்லிய கத்தியால் கவனமாக அறுத்து நீக்கி விட்டு, வேரைச் சுற்றியுள்ள மண் சிதையாமல் செடிகளை நட்டு, மண்ணை நன்றாக மிதித்து விட வேண்டும்.

பராமரிப்பு

நடவு செய்த நாளிலிருந்து நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, ஒருமாதம் வரையில், 3-5 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியம். உயிர்ப் பிடித்து தழைக்கும் செடிக்கு, வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பழுதான நாற்றுகளை நீக்கி விட்டு இரண்டு மாதத்துக்குள் மறுநடவு செய்ய வேண்டும். ஓராண்டு வரையில் களையெடுப்பது அவசியம். பிறகு, மரத்திலிருந்து விழும் சிறு கிளைகள் மூடாக்காக அமைந்து களைகளைக் கட்டுப்படுத்தும். மேலும், நிலத்திலுள்ள நீர் ஆவியாவதையும் குறைக்கும்.

ஓராண்டு முடிவில், தரையிலிருந்து மூன்றில் ஒரு பங்கு உயரம் வரையில் உள்ள கிளைகளை வெட்டிவிட வேண்டும். சவுக்கு வேர்களில் இருக்கும் பிராங்கியா வகை பாக்டீரியாக்கள், காற்றிலுள்ள நைட்ரஜனை நைட்ரேட் உப்புகளாக மாற்றி, நிலத்தில் சேமிப்பதால் மண் வளம் மேம்படும்.

செடிகள் நன்கு வளர, 40-50 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட் 100 கிலோ பொட்டாசைக் கலந்து 4-5 முறை இட வேண்டும்.

ஊடுபயிர்

ஓராண்டு வரையில், நிலக்கடலை, தர்ப்பூசணி, மிளகாய், கடலை, எள், வெண்டை, உளுந்து, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஊடுபயிராக இடலாம். இதனால், விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம், சவுக்கு மரங்களின் வளர்ச்சி அதிகமாதல், களைகள் கட்டுப்படுதல் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு

இளம் செடிகளின் வேர்களை கரையான்கள் தாக்கிப் பாதிப்பை உண்டாக்கும். இதைக் கட்டப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி குளோர் பைரிபாஸ் வீதம் கலந்து, வேருக்கு அருகில் தெளிக்க வேண்டும். சுருள் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி என்டோசல்பான் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்த, குச்சியின் மூலம் புழுவை வெளியே எடுத்து விட்டு, அப்பகுதியில், 15 மில்லி டைகுளோரோவாஸ் மருந்தைப் பஞ்சில் நனைத்து வைக்க வேண்டும்.

கருகல் நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றி விட்டு, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் மாங்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். வாடல் நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட மரத்தைச் சுற்றி ஒரு அடி ஆழத்தில் குழியெடுத்து, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு, புளுகாப்பர் வீதம் கலந்து ஊற்ற வேண்டும்.

அறுவடை

தேவைக்கு ஏற்ப, 3-5 ஆண்டுகளில் இருந்து வெட்டத் தொடங்கலாம். மூன்று ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் விதைக் கன்றுகள் மூலம் 40-50 டன் மரங்கள், ஒட்டுக் கன்றுகள் மூலம் 60-70 டன் மரங்கள் கிடைக்கும்.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர்.க.வேங்கடலெட்சுமி, இணை பேராசிரியர், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks