நினைத்த நேரத்தில் காசாக்கக் கூடிய உயிரினம் ஆடு. இது ஏழைகளின் பணப் பெட்டியாகக் கருதப்படுகிறது. இதை முறையாக வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். இதை அவரவர் வசதிக்கு ஏற்ப வளர்க்கலாம்.
மேய்ச்சல் முறை
செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை நிலங்களில் மேயவிட்டு வளர்ப்பது மேய்ச்சல் முறை. இதில், தீவனச் செலவு குறைவு. இம்முறையில் எல்லா வகைப் புற்களையும் நல்ல முறையில் பயன்படுத்த முடியாது. எனவே, சுழற்சி முறை மேய்ச்சலைப் பின்பற்றலாம்.
சுழற்சி முறை மேய்ச்சல்
மேய்ச்சல் நிலத்தை, தற்காலிகத் தடுப்புகள் மூலம் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து, அவற்றில் ஆடுகளை மேய விடலாம். இம்முறையில் ஆடுகள் படிப்படியாக ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாற்றப்படும்.
இப்படிச் செய்தால், மேய்ச்சல் நிலத்தின் முதல் பகுதியில் புற்கள் வளர்ந்து, இரண்டாம் மேய்ச்சலுக்குத் தயாராகி விடும். இதனால் ஒட்டுண்ணித் தாக்கம் குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும். மேலும், தரமான புற்கள் ஆண்டு முழுவதும் ஆடுகளுக்குக் கிடைக்கும்.
இம்முறையில், முதலில் குட்டிகளை மேயவிட்டு, பின்னர் பெரிய ஆடுகளை மேய விட வேண்டும். இதனால், குட்டிகள் மேய்ந்தது போக மீதமுள்ள புற்களைப் பெரிய ஆடுகள் தின்று விடும்.
மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை
குறைவான மேய்ச்சல் நிலம் உள்ள இடங்களில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு இம்முறை ஏற்றதாகும். இதில், வேலியிட்ட மேய்ச்சல் நிலத்தில் 3-5 மணி நேரம் ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்படும். அடுத்து, கொட்டிலில் வைத்துத் தீவனம் தரப்படும். இரவில் ஆடுகள் கொட்டிலில் அடைக்கப்படும். இம்முறையில் தீவனச்செலவு சற்று அதிகமாகும்.
மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் மூலம் ஆடுகளின் உணவுத் தேவை சரி செய்யப்படும். 50-350 ஆடுகளை இம்முறையில் வளர்க்கலாம். வறட்சிக் காலத்தில், பயிரிடப்பட்ட புல் வகைகள் உணவாக அமையும். தரமான குட்டிகள் மூலம் இறைச்சியும் பாலும் கிடைக்கும். குறைந்த வேலையாட்களே போதும் என்பதால், செலவு குறைந்து இலாபம் மிகும்.
கொட்டில் முறை
இது, நாள் முழுவதும் கொட்டிலில் ஆடுகளை வைத்துத் தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இம்முறையில் 50-250 ஆடுகளை வளர்க்கலாம். பாலுக்காக வளர்க்கும் ஆட்டினங்களுக்கு இம்முறை உகந்தது. வேளாண் கழிவுப் பொருள்களைச் சேர்த்துக் கொடுத்து, ஒரு எக்டரில் 37-45 ஆடுகளை வளர்க்கலாம்.
இதில், நிறைய வேலையாட்கள் மற்றும் பணம் தேவைப்படும். ஆடுகளைக் கண்காணிக்க, கட்டுப்படுத்த இயலும். ஆட்டுச் சாணம் ஓரே இடத்தில் இருப்பதால் நல்ல உரமாகும். நிறைய ஆடுகளுக்குக் குறைந்த இடவசதி போதும்.
மண் தரையில் வளர்த்தல்
இம்முறையில், ஆண்டுதோறும் 1-2 அங்குல மேல் மண்ணை எடுத்துவிட வேண்டும். மாதம் ஒருமுறை சுண்ணாம்புத் தூளைத் தெளித்து, கொட்டிலில் நோய்த் தாக்கத்தைக் குறைக்கலாம். நல்ல மேடான, நீர்த் தேங்காத இடத்தில் கொட்டிலை அமைக்க வேண்டும்.
ஆழ்கூள முறை
இதில், ஆடுகள் இருக்குமிடம் வேர்க்கடலைத் தோல், கரும்புத் தோகை போன்றவை மூலம், அரையடி உயரம் பரப்பப்படும். ஆடுகளின் சாணமும் சிறுநீரும் ஆழ்கூளத்தில் கலந்து நல்ல உரமாகும்.
ஆழ்கூளத்தை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அள்ளிவிட வேண்டும். மழைக் காலத்தில், ஆழ்கூளம் அதிக ஈரமாக இருந்தால், அம்மோனியா வாயு உற்பத்தியாகும். ஆகவே, ஈரம் அதிகமாக இருக்கக் கூடாது.
பரண்மேல் வளர்ப்பு
இது, தரையிலிருந்து மூன்று மீட்டர் உயரத்தில் பலகைகளைப் பரப்பி, ஆடுகளை வளர்ப்பதாகும். இம்முறையில் வேலையாட்கள் குறைவாகவும், பசுந்தீவன உற்பத்திக்கு நிலமும் நீரும் அதிகமாகவும் தேவைப்படும். ஆடுகளின் சாணமும் சிறுநீரும் கீழே மண் தரையில் விழுந்து விடுவதால், கொட்டில் சுத்தமாக இருக்கும்.
முனைவர் சு.உஷா, உதவிப் பேராசிரியர், கால்நடை உற்பத்தித் துறை, கால்நடைக் கல்லூரி, வேப்பேரி, சென்னை – 600 007.