ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

ஆடு

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆடு வளர்ப்பு முக்கியப் பங்களிக்கிறது. குறைந்த இனப்பெருக்க இடைவெளி, கூடுதல் இனவிருத்தித் திறன், நல்ல விற்பனை வாய்ப்பு ஆகியவற்றால், வெள்ளாடு வளர்ப்பு அதிகமாகி வருகிறது.

மேலும், இந்தியாவில் உள்ள வெள்ளாடுகள், இறைச்சி உற்பத்தித் திறன், வெப்பத்தைத் தாங்கும் திறன், நீர் அயர்ச்சியைத் தாங்கும் திறன் போன்றவற்றில் மற்ற கால்நடைகளை விடச் சிறந்து விளங்குகின்றன.

வெள்ளாடுகள், கடினமான மற்றும் தரம் குறைந்த தீவனத்தைக் கூட, அதிக விலையுள்ள இறைச்சியாக மாற்றும் தன்மை மிக்கவை. சிறந்த உரத்தை அளிக்கின்றன.

இறைச்சி, பால், உரோமம், தோல், சாணம் போன்றவற்றை அளித்து, நல்ல இலாபத்தை ஈட்டித் தருகின்றன. இதனால், வெள்ளாடு ஏழைகளின் பசு எனப்படுகிறது.

இத்தகைய வெள்ளாடுகளின் நோய் மற்றும் உடல் சார்ந்த சிக்கல்களுக்கு, வீட்டிலுள்ள சிலவகை வாசனைப் பொருள்கள், மூலிகைச் செடிகள் மற்றும் காய்கறிகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

எளிதில் செய்யக்கூடிய, பக்க விளைவு இல்லாத, வேதிப் பொருள்கள் அற்ற, வீட்டு மருத்துவம் குறைந்த செலவில் கிடைக்கிறது. அதனால், இது இப்போது பிரபலமடைந்து வருகிறது. வெள்ளாடுகளுக்கு நமது மூலிகை வைத்தியம் எப்படியெல்லாம் பயன்படும் என்று பார்ப்போம்.

குடற்புழு நீக்கம்

வெள்ளாடு வளர்ப்பில் உள்ள முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று, குடற் புழுக்களால் ஏற்படும் இழப்பு. ஆடுகளின் குடற்புழு நீக்கத்தில், ஹோமியோபதி மருந்துகளை விட, மூலிகை மருந்துகள் சிறந்தவை.

இந்த மருந்துகள் எளிதில் கிடைக்கும். வீட்டிலேயே எளிதில் வளர்க்கலாம். இந்த இயற்கை மருந்துகள் ஆட்டின் பால் மற்றும் இறைச்சியில் வெளியேறுவதில்லை.

ஆட்டுத் தீவனத்தில் தாதுப்புகள் சரியான அளவில் இருக்கும் போது, ஆடுகள் குடற் புழுக்களால் பாதிக்கப்படுவது இல்லை. உதாரணமாக, தாமிரச்சத்துப் பற்றாக்குறை உள்ள ஆடுகளில், குடற்புழுப் பாதிப்பு அதிகமாக இருக்கும். நாள்பட்ட குடற்புழுப் பாதிப்புள்ள ஆடுகளுக்கு, தாமிரச்சத்தை அளித்தால், குடற் புழுக்கள் நீங்கி விடும்.

குடற் புழுக்களை நீக்கும் தன்மை, பெரும்பாலான தாவரங்களுக்கு உள்ளது. எளிதில் கிடைக்கும் பூசணி விதை, வால்நட் எனப்படும் கறுப்பு வாதுமைக் கொட்டை, பூண்டு, காட்டுக்கடுகு மற்றும் காட்டு கேரட்டுக்கு, குடற் புழுக்களை நீக்கும் தன்மை உள்ளது.

ஒரு மூலிகைத் தாவரம் அனைத்துக் குடற் புழுக்களையும் நீக்கும் தன்மையில் இருப்பது அரிதாகும். எனவே, பல மூலிகைகளைச் சேர்த்துப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

உதாரணமாக, சினை ஆடுகள் மற்றும் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு, பூண்டு மற்றும் கொத்தமல்லித் தழையுடன் வேப்பிலையைச் சேர்த்து, குடற்புழு நீக்கியாகப் பயன்படுத்தலாம். ஆனால், ஆண் ஆட்டுக்கு வேப்பிலையைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது, விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

ஆப்பிள் சிடார் வினிகரை, குடிநீரில் அல்லது தீவனத்தில் கலந்து குடற்புழு நீக்கியாகப் பயன்படுத்தலாம். இதற்குச் சத்து மதிப்பும் உள்ளது. ஆப்பிள் சிடார் வினிகரில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. மேலும், இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கும். சினை ஆடுகளுக்கு, முக்கியமாக, பல குட்டிகளைச் சுமக்கும் ஆடுகளுக்கு இது சிறந்த உணவாகும்.

குடற்புழு நீக்கியாகப் பயன்படும் இயற்கை மருந்துகள்

இயற்கை மருந்துகள் அளிக்கும் முறைகள்: கற்றாழைச் சாற்றை 6-8 சொட்டு தரலாம். அல்லது 4 குழிக்கரண்டி விளக்கெண்ணெய்யை ஒருமுறை தரலாம். அல்லது 2 பூண்டுப் பற்கள் அல்லது ஒரு பூண்டுச்செடி வீதம், ஒரு நாளைக்கு இரண்டு முறை தரலாம். அல்லது எலுமிச்சை விதைகளை அரைத்து, தேன் கலந்து ஒரு குழிக்கரண்டி வீதம் தினமும் தரலாம்.

உருளைக் கிழங்கில் சாறெடுத்துத் தரலாம். அல்லது 2 கையளவு கடுகு அல்லது ஒரு கடுகுச்செடி வீதம், ஒரு நாளைக்கு இருமுறை தரலாம். அல்லது வால்நட் எனப்படும் வாதுமைக் கொட்டை இலைகளை 2 கையளவு எடுத்து, கஷாயம் வைத்து, தேனில் கலந்து தரலாம். அல்லது மல்பெரி என்னும் முசுக்கொட்டைப் பழங்களை, கையளவு வீதம், ஒரு நாளைக்கு இருமுறை தரலாம்.

குட்டி ஈனுதல்

சிறந்த சத்துகளைப் பெற்ற ஆடுகள் நல்ல குட்டிகளை ஈனும். இருப்பினும் குட்டி ஈனுதலை எளிதாக்க, ராஸ்பெர்ரி இலைகளை, சினை ஆடுகளுக்குத் தரலாம். புதிய அல்லது காய்ந்த ராஸ்பெர்ரி இலைகளைத் தருவதன் மூலம், கருப்பை வலுவாகி, குட்டி ஈனுதல் எளிதாகும். மேலும், குட்டிகளுக்குத் தேவையான பால் சுரப்பும் அதிகமாகும்.

மடிவீக்க நோய்

இதற்குப் பூண்டும் இஞ்சியும் சிறந்த மருந்தாகும். வெந்நீர் ஒத்தடம் கொடுத்து மிளகுக்கீரை எண்ணெய்யை வைத்துத் தேய்க்கும் போது, ஆட்டின் மடியில் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, மடி ஒவ்வாமை குறையும்.

சுவாசக் கோளாறுகள்

மிளகுக்கீரை அல்லது இஞ்சி மற்றும் பூண்டைச் சம அளவில் கலந்து அளிப்பது சிறந்தது. கழிச்சலுக்கு, குடற்புழு நீக்கம் மற்றும் நுண்மக் கொல்லியை அளித்து, கழிச்சல் நின்ற பின்பு, தயிரைக் கொடுக்க வேண்டும். இதனால், ஆட்டின் பெருவயிறு நன்கு செயல்படும்.

வயிறு ஊதுதல்

வெள்ளாட்டில் வயிறு ஊதுதல் விரைவில் ஏற்படும். இதற்குச் சிகிச்சை அளிக்காவிடில் ஆடுகள் இறக்க நேரிடும். ஆடுகள் அதிகளவு தானியங்கள் மற்றும் இளம் பயிர்களை மேய்வதால், வயிற்றிலிருந்து வாயு வெளியேற முடியாமல் வயிறு ஊதும்.

இதற்கு, சோடா உப்பை நீரில் கலந்து வாய் வழியாக ஊற்றலாம். சமையல் எண்ணெய்யை வாய் வழியாகத் தருவதும் வயிற்றிலுள்ள வாயு வெளியேற உதவும். வயிற்றை உருவி விடுவதும் வயிற்று வீக்கத்தைக் குறைக்கும்.

புண்கள் ஆற

ஆப்பிள் சிடார் வினிகர், கற்றாழைச் சாறு, எக்கினேசியாவைக் கலந்து புண்ணில் பலமுறை தெளிக்க வேண்டும்.

பால் சுரப்பு அதிகமாக

ஆல்பா ஆல்பா இலைகள் பால் சுரப்பை அதிகரிக்கும். இதைக் கறவை ஆடுகளுக்குத் தினமும் தரலாம். இதில், குளோரோபில் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் இரத்தம் உறைதலைத் தூண்டும். சினை ஆடுகளுக்கு ஆல்பா ஆல்பா இலைகளைத் தந்தால், குட்டி ஈனுதலின் போது ஏற்படும் இரத்தப்போக்கு குறையும்.

பெரும்பாலான மூலிகைகள் பக்க விளைவுகள் அற்றவை. விலை மலிவாக, எளிதாகக் கிடைக்கும். இரசாயன மருந்துகளைப் போல, மூலிகை மருந்துகள் பால் மற்றும் இறைச்சியில் வெளியேறாது.

இயற்கை மருத்துவம் ஏழை மக்களால் எளிதில் பயன்படுத்தக் கூடியது. இயற்கை மருத்துவத்தால் இயங்கும் ஆட்டுப் பண்ணை, ஆடு வளர்ப்போர் மற்றும் ஆட்டிறைச்சி விரும்பிகளுக்குச் சிறந்த பரிசாகும்.


ஆடு P.SUMITHA 1 e1643028495985

ப.சுமிதா, பு.வெ.சௌமியா, கு.சுகுமார், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல். சு.ஸ்ரீவிக்னேஷ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை – 641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading